வருசநாடு : மயிலாடும்பாறை அருகே இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடும்பாறை ஊராட்சியில் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் மூல வைகை ஆறு செல்கிறது. இந்த மூல வைகை ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அப்பகுதியில் உள்ள தடுப்பு சுவர்கள் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது.
இதனால் காற்றாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்து சென்றதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் இடிந்த தடுப்புசுவர், அதன் அருகே சுமார் 400 மீட்டர் தூரம் புதிய தடுப்பு சுவர் கட்ட வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மயிலாடும்பாறை இந்திராநகர் கிராம விவசாயிகள் கூறுகையில், ‘‘மழைகாலங்களில் மூல வைகை ஆற்றில் அதிகளவில் வெள்ளம் வருகின்றது. இதனால் மழைக்காலங்களில் ஆற்றங் கரையோரமாக உள்ள பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடுகளில் இரவு நேரங்களில் தூங்காமல் விழிக்கும் சூழலும் நிலவுகிறது.
இதற்கு முக்கிய காரணம் மூல வைகை காட்டாற்று வெள்ளம் எப்பொழுது வருகிறது என்றே யாருக்கும் தெரிவதில்லை. எனவே, ஆண்டிபட்டி பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து உடைந்த தடுப்பு சுவர் மற்றும் புதிய தடுப்பு சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
இது குறித்து மயிலாடும்பாறை விவசாயிகள் கூறுகையில், ‘‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மயிலாடும்பாறை மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் அதிக அளவில் வந்தது.
இதனால் தடுப்புச் சுவர்கள் பலத்த சேதம் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இதனால் புதிய தடுப்பு சுவர் கட்டி பொது மக்களை காக்க வேண்டும். இதற்கு தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.
The post மயிலாடும்பாறை அருகே இடிந்து விழுந்த தடுப்புச்சுவரை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.