சென்னை: தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு குறைபாடுகளை சுட்டி காட்டி தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேராசிரியர் வருகைப் பதிவு போதிய அளவு இல்லாதது, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருத்தல் உள்ளிட்ட குறைபாடுகளை சுட்டிக்காட்டி தமிழகத்தின் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாட்டில் 700க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளித்தல், அவற்றைப் புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேசிய மருத்துவ ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கல்லூரிகளின் அடிப்படை வசதிகள், கட்டுமானம், கல்வி சார்ந்த நடவடிக்கைகள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள், ஆய்வக வசதிகள், மருத்துவமனை கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது.
அதேபோன்று மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் ஒருங்கிணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பேராசிரியா்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அங்கீகாரம் புதுப்பித்தல், இடங்களை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது. இந்நிலையில், நிகழாண்டு தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான ஆய்வை தேசிய மருத்துவ ஆணையக் குழு மேற்கொண்டது. அதில் சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரியைத் தவிர்த்து மற்ற அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப் பதிவு, பேராசிரியா் பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர், சேலம் (மோகன் குமாரமங்கலம்) மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி (கி.ஆ.பெ. விஸ்வநாதம்) அரசு மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி, வேலூர், தேனி, தருமபுரி, விழுப்புரம், திருவாரூர், சிவகங்கை, திருவண்ணாமலை, கோவை இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, ராமநாதபுரம், திருவள்ளூர், திருப்பூர், விருதுநகர், கடலூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
* காலி பணியிடம் இல்லை பயோமெட்ரிக் வருகைப் பதிவு கட்டாயம்: அமைச்சர் விளக்கம்
இப் பிரச்னை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் மட்டுமே தேசிய மருத்துவ கவுன்சில் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக பெரிய பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் என்எம்சி நிர்வாகம் ஆண்டுதோறும் நோட்டீஸ் வழங்கி வருகிறது. கடந்த ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 26 கல்லூரிகள் உரிய பதிலை தக்க விளக்கங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தேசிய மருத்துவ குழுமத்திற்கு அனுப்பியுள்ளன. 3 கல்லூரிகள் இன்றைக்கு பதிலை அனுப்பியுள்ளன.
மீதமுள்ள மருத்துவக் கல்லூரிகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய விளக்கத்தினை அனுப்பி விடுவார்கள். பயோமெட்ரிக் வருகை மற்றும் செல்கை பதிவை கட்டாயமாக்குமாறு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 415 காலிப்பணியிடங்கள் இருந்தது. இதில் கடந்த வாரம் 318 காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 87 காலிப்பணியிடங்கள் நேற்று நிரப்பப்பட்டுள்ளது. எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் காலிப் பணியிடம் என்பது இல்லை என்றார்.
The post தமிழகத்தில் 35 அரசு மருத்துவ கல்லூரிகளில் வருகைப் பதிவில் குறைபாடு: விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது என்எம்சி appeared first on Dinakaran.