மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள்

1 month ago 6

* 3000 ஏக்கர் மனை பட்டாவாக மாறியது

* ஊராட்சிகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதியாக இருந்து வருகிறது. இங்கு தெற்கு ராஜன் வாய்க்கால் மற்றும் புது மண்ணியாறு உள்ளிட்ட வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி நடந்து வருகிறது. கொள்ளிடம் கடைமடை பகுதியில் மட்டும் சுமார் 50,000 ஏக்கர் நிலங்களில் குறுவை மற்றும் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தடையின்றி மேட்டூரிலிருந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் விவசாயிகள் தொடர்ந்து நெற்பயிற் சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். இடைப்பட்ட காலத்தில் மழைப்பொழிவு குறைந்து மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் வந்து சேராததால், வாய்க்கால் பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு உரிய அளவு கிடைக்காமல் போனது. இதனால் முக்கியமான கொள்ளிடம் ஆறு மற்றும் கொள்ளிடம் பகுதியில் உள்ள உப்பனாறுகளில் கடல் நீர் புக ஆரம்பித்தது. நிலத்தடி நீரும் கரையோர பகுதிகளில் உப்பு நீராக மாற ஆரம்பித்தன.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், சுப்பராயபுரம், தற்காஸ், தாண்டவன்குளம், புதுப்பட்டினம், கூழையாறு, வேட்டங்குடி, இருவக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் வருடா வருடம் சாகுபடி செய்து வரும் நெற்பயிர் படிப்படியாக குறைந்து போனது. ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள நிலங்கள் வாய்க்கால் பாசனத்தையே முழுமையாக நம்பி இருந்த நிலையில் வாய்க்கால் பாசனம் மூலம் தண்ணீர் வருவதில் தொய்வு ஏற்பட்டதால் நெற்பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு தற்போது கரையோர பகுதியில் வெறும் 30% நிலங்களில் மட்டுமே நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

மீதமுள்ள நிலங்கள் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டு அத்தொழில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இறால் குட்டைகள் வெட்டப்பட்ட நிலங்கள் மட்டுமின்றி அதைச் சார்ந்த நிலங்களும் உவர் நிலங்களாக மாறிவரும் சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் நெற்பயிற் சாகுபடி செய்யும் நிலங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் கடந்த 20 ஆண்டு காலங்களில் சுமார் 3000 ஏக்கர் விளைநிலங்கள் வீட்டுமனை பட்டாக்களாக மாற்றப்பட்டுள்ளன. அன்றைய விளை நிலங்கள் இன்று பல நகர்களாக, குடியிருப்புகளாக மாறி உள்ளன. இதன் மூலம் படிப்படியாக விளை நிலங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றன.

விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறியதால் அதனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் குறிப்பிட்ட ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு மானிய உதவியால் அவை மீண்டும் வேளாண்துறை மூலம் பொலிவு பெற தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 50 ஏக்கர் நிலம் கொள்ளிடம் வட்டாரத்தில் மட்டும் மேம்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இனிவரும் காலங்களில் விளை நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றும் முயற்சியை ஊராட்சிகள் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி நிலங்களை தொடர்ந்து பயிர் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் வீட்டு மனைகளாக மாறும் விளை நிலங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article