பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் அவர்களுக்கு விளைவுகள் மிக மோசமாக இருக்கும்: முப்படை அதிகாரிகள் எச்சரிக்கை

17 hours ago 4

டெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 26 பேரை சுட்டு கொன்றதற்கு பதிலடி கொடுக்க ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய விமானப்படை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசின.

இதனால் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இதை இந்தியா முறியடித்தது. காஷ்மீர் எல்லை பகுதிகளிலும் பொதுமக்கள் மீது பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய போர் விமானங்கள் நேற்று பாகிஸ்தானில் ஊடுருவி 3 முக்கிய விமானப்படை தளங்கள், ஆயுத கிடங்குகள் உட்பட பாகிஸ்தான் 8 ராணுவ மையங்கள் மீது குண்டுகளை வீசின. இதில் பாகிஸ்தானுக்கு மிகப் பெரியளவில் சேதம் ஏற்பட்டது. இந்தியாவின் தாக்குதலை பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை.

இதன்பின் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே உடனடியாக சண்டை நிறுத்தம் செய்ய வலியுறுத்தியது. பணிந்து செல்ல பாகிஸ்தான் முன்வந்தது. இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் ஆகியவை நேற்று மாலை சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டன. ஆனால் போர் நிறுத்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சு நடந்தது. அதற்கு பதிலடியும் இந்திய ராணுவம் தரப்பில் தரப்பட்டது.

இந்நிலையில் சிந்தூர் ஆபரேஷன் தொடர்பாக முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அந்த பேட்டியில்; “பாகிஸ்தானில் பல இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்தது. மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது. தீவிரவாத கட்டமைப்புகளை தகர்க்கவே தாக்குதல் நடத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது.பயங்கரவாதிகளை பழிதீர்க்கவே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் எச்சரிக்கையே ஆபரேஷன் சிந்தூர்.அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர்.

காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் உள்ளிட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.போரை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே பாகிஸ்தான் படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய அனைத்துத் தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் 40 ராணுவ வீரர்கள், அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவத் தளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.எங்களுடைய மோதல் தீவிரவாதிகளுடன் மட்டுமே, பாகிஸ்தான் ராணுவத்துடன் இல்லை.இந்திய ராணுவத் தாக்குதலில் பாகிஸ்தானின் 40 ராணுவ வீரர்கள், அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மே 8 ஆம் தேதி இரவு ஏராளமான ட்ரோன்கள் நமது நகரங்களை நோக்கி வந்தன.நாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து ட்ரோன்களை அழித்து இலக்குகளை காப்பாற்றினோம்.

இன்று இரவு பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் கடுமையான பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஹாட்லைனில் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பியுள்ளோம்.மே.10 மாலை 3.35 மணிக்கு இருநாட்டு டிஜிஎம்ஓக்களும் பேசினோம்; ஏமாற்றம் தரும் விதமாக சில மணி நேரத்துக்குள்ளே பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் இன்று மீண்டும் தாக்கினால் சும்மா விடமாட்டோம்” என முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் அவர்களுக்கு விளைவுகள் மிக மோசமாக இருக்கும்: முப்படை அதிகாரிகள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article