
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சாராய விற்பனை குறித்து தட்டிக் கேட்பவர்கள் மீது தாக்குதல் நடத்துவதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், போலீசார் மேற்கொண்ட சோதனையின்போது, ராஜ்குமார் கைது செய்யப்பட்டார்.
ஜாமீனில் வெளி வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தட்டிக்கேட்டுள்ளான். அந்த சிறுவனை ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கதுரை, மூவேந்தன் மூவரும் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் சரமாரியாகத் தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். அவர்களது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கல்லூரி மாணவர் மற்றும் இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து குற்றவாளிகள் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சாராய விற்பனையை தட்டிக்கேட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.