மயிலாடுதுறை அருகே பயங்கரம் இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை: சாராய வியாபாரிகளின் வீடுகள் சூறை

1 week ago 3

குத்தாலம்: மயிலாடுதுறை அருகே இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்யப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாராய வியாபாரிகள் 3 பேரின் வீடுகளை சூறையாடினர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்டம் வடக்கு தெருவை சேர்ந்த ரமேஷ் மகன் தினேஷ் (28). இவரது நண்பர்கள், அதே பகுதியை சேர்ந்த கல்யாண்குமார் மகன் ஹரிஷ் (22), அஜய் மற்றும் உறவினர் வீட்டிற்கு வந்திருந்த மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மகன் ஹரி சக்தி (22). அதே பகுதியை சேர்ந்த ராதா மகன் ராஜ்குமார் (30). இவரது மனைவியின் சகோதரர்கள் தங்கதுரை (28), மூவேந்தன் (24). இந்நிலையில் தினேஷ், ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது மைத்துனர்களுடன் அங்கு வந்த ராஜ்குமார், 4 பேரிடமும் தகராறு செய்தார். பின்னர் ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோரை கத்தியால் சரமாரி குத்தி விட்டு ஓடி விட்டனர். இதில் ஹரிசும், ஹரி சக்தியும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அந்த இடத்திலேயே இறந்தனர். அஜய் படுகாயமடைந்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும் ஹரிஸ், ஹரி சக்தி உறவினர்கள் ஆத்திரமடைந்து ராஜ்குமார் வீட்டின் முன் பகுதியில் உள்ள கூரையை தீ வைத்து கொளுத்தினர். மேலும் மூவேந்தன் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவியது.

தகவலறிந்து வந்த மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் சம்பவ இடத்தை பார்வையிட்டு உயிரிழந்தவர்களின், உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. படுகாயமடைந்த அஜய்யும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் ஹரிஷ், ஹரிசக்தியின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு நேற்று அதிகாலை

3 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி பாலாஜி பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமார், தங்கதுரையை நேற்று முன்தினம் இரவும், மூவேந்தனை நேற்று காலையும் கைது செய்தனர். அவர்களை பெரம்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மூவேந்தனுக்கும், தினேசுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாகவும், கடந்த 13ம்தேதி டூவீலரில் சென்ற தினேஷ், மூவேந்தனை பார்த்து கூச்சலிட்டபடி சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்களிடையே குடும்ப தகராறும் இருந்துள்ளது. இதன் காரணமாகவே மூவேந்தன் உள்ளிட்ட 3 பேரும் தினேஷை தாக்க வந்ததாகவும், அப்போது தடுத்ததால் அவரது நண்பர்களான ஹரிசும், ஹரிசக்தியும் கொல்லப்பட்டனர்’ என்றனர்.

ராஜ்குமாரும், அவரது மைத்துனர்களும் சாராய விற்பனை செய்து வருகின்றனர். சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் கடந்த 13ம்தேதி தான் ஜாமீனில் வந்துள்ளார். வந்தவர் மீண்டும் சாராய விற்பனையை துவக்கி உள்ளார். இதை தினேஷ் தட்டிக்ேகட்டுள்ளார். இதன்காரணமாகவே இந்த கொலைகள் நடந்திருப்பதாக கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.இப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் முட்டம் மற்றும் அரசு மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட ஹரிஷ் பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஹரி சக்தி கும்பகோணத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இஇஇ இறுதி ஆண்டு படித்து வந்தார்.

இந்த இரட்டை கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளது, அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் நேற்று காலை 9 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் சாராய வியாபாரியின் மனைவி மற்றும் தங்கையை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்பி ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post மயிலாடுதுறை அருகே பயங்கரம் இன்ஜினியரிங் மாணவன் உள்பட 2 பேர் சரமாரி குத்திக்கொலை: சாராய வியாபாரிகளின் வீடுகள் சூறை appeared first on Dinakaran.

Read Entire Article