தர்மபுரி அருகே பயங்கரம் பட்டாசு குடோன் வெடித்து 3 பெண்கள் உடல் சிதறி பலி: குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு

3 hours ago 1

அரூர்: தர்மபுரி அருகே பட்டாசு குடோன் வெடித்ததில் 3 பெண்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி லட்சுமி. இவர்கள், ஊருக்கு அருகே வெதரம்பட்டி சாலையில் பட்டாசு ஆலை நடத்தினர். இங்கு, பட்டாசு மற்றும் நாட்டு வெடிகளை மொத்தமாக தயாரித்து, குடோனில் இருப்பு வைத்து கோயில் விழாக்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த ஆலையில் கடந்த ஓராண்டாக அதே பகுதியைச் சேர்ந்த அக்காள்- தங்கைகளான செண்பகம் (33), திருமலர் (30) மற்றும் மஞ்சு (30) ஆகியோர் பணியாற்றி வந்தனர். நேற்று காலை லட்சுமி பட்டாசு ஆலையை திறந்துள்ளார். இதையடுத்து, செண்பகம் உள்ளிட்ட 3 பேரும் வேலைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து மதியம் சாப்பாட்டிற்காக லட்சுமி வீட்டிற்கு சென்று விட்டார்.
பிற்பகல் 1.45 மணியளவில் பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலை மற்றும் குடோன் வெடித்தது.

இதில், சிமென்ட் செங்கற்கள் சுக்கு நூறாக சிதறின. அப்போது ஏற்பட்ட சத்தம் சுமார் 3 கி.மீ., வரை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அங்கு பொதுமக்கள் குவிந்தனர். தகவலின்பேரில், அரூர் மற்றும் தர்மபுரி தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், செண்பகம், திருமலர், மஞ்சு ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது உடல் பாகங்கள் 100 மீட்டருக்கும் அப்பால் போய் கிடந்தது. உடல் பாகங்களை தீயணைப்பு வீரர்கள் தேடி கண்டுபிடித்து சேகரித்தனர்.

தகவலறிந்ததும் கலெக்டர் சதீஷ், எஸ்.பி., மகேஸ்வரன், தர்மபுரி எம்.பி. வக்கீல் ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் சென்று விசாரித்தனர். பலியான செண்பகத்தின் கணவர் மேகநாதன். இவர்களுக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். திருமலரின் கணவர் விஜயகுமார். இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். மஞ்சுவின் கணவர் தியாகு. 2 குழந்தைகள் உள்ளனர்.

தகவலறிந்து வந்த அவர்கள், 3 பேரின் உடல் பாகங்களை கண்டு கதறியது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாசி மாதத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் கோயில் விழாக்கள் களை கட்டியுள்ளது. இதனையொட்டி, அளவுக்கதிகமாக பட்டாசுகளை தயாரித்து இருப்பு வைத்திருந்ததாக தெரிகிறது. சுட்டெரிக்கும் வெயிலுக்கு குடோனுக்குள் வெப்ப தாக்குதல் அதிகிரித்து மதிய வேளையில் பட்டாசுகள் தீப்பிடித்துக் கொண்டதில் விபத்து நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்த துயரமான செய்தியை கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

The post தர்மபுரி அருகே பயங்கரம் பட்டாசு குடோன் வெடித்து 3 பெண்கள் உடல் சிதறி பலி: குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article