டெல்லி,
முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் நேற்று முன் தினம் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்தார். திடீர் உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மன்மோகன் சிங்கின் உடல் இன்று காலை 8 மணிக்கு அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதன்பின்னர், காலை 9.30 மணிக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்ததும், அங்கு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதி சடங்குகள் நடைபெறும். பின்னர் காலை 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது.