மன்னனின் குஷ்ட நோயை நீக்கிய இறைவன்.. தண்டலைச்சேரி நீள்நெறி நாதர் கோவில்

3 months ago 23

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள சிறு கிராமம், தண்டலைச் சேரி. இங்கு நீள்நெறி என்னும் சிவாலயத்தில் இருக்கும் இறைவன் நீள்நெறி நாதர்.

ராஜகோபுரம் இல்லா முகப்பு வாசலில் நுழையும்போது கொடிமரமில்லா பலிபீடம், அதிகார நந்தி உள்ளது. கிழக்கு நோக்கிய சுவாமி சன்னிதி, தெற்கு நோக்கிய அம்பாள் ஞானம்பிகை, பிரகாரத்தில் விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகங்களின் சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன. கருவறையின் பின்புறம் தல விருட்சமான குருந்த மரமும், அதனடியில் சிவலிங்கமும் உள்ளது. கோவில் சற்று உயரமான இடத்தில் உள்ளதால் மாடக்கோவில் வகையைச் சார்ந்ததாக காணப்படுகிறது.

மாடக்கோவில் என்றதும் எழுபதுக்கும் மேற்பட்ட மாடக் கோவில்களைக் கட்டிய கோச்செங்கண்ணன் சோழன் நினைவுக்கு வருகிறார்.

திருஞான சம்பந்தர், இத்தலத்தின் தேவாரப் பதிகத்தில்,

'கருவ ருந்தலின் நாண்முகன் கண்ணனென்று

இருவ ருந்தெரி பானொரு வன்னிடம்

செருவ ருந்திய செம்பியன் கோச் செங்கண்

நிருபர் தண்டலை நீணெறி காண்மினே' என்று பாடுகிறார்.

தொழுநோய் தீர்த்த தலம்

கோச்செங்கண்ணன் என்னும் சோழ மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அவன் ஒரு முறை குஷ்ட நோயால் அவதிப்பட்டு வந்தான். பல்வேறு வைத்திய முறைகளில் சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் போனது. இதையடுத்து தெய்வத்தின் மீது தனது நம்பிக்கையை அதிகப்படுத்தினான். ஒவ்வொரு ஆலயமாக சென்று வந்தான். ஆனால் எதற்கும் பலனில்லாமல் போய்க் கொண்டிருந்தது. ஒருமுறை அவனது கனவில், 'கல் மாடு புல் தின்னும் தலத்திற்கு சென்று வணங்கி வழிபடு. உன்னுடைய நோய் தீரும்' என்று அசரீரியாக குரல் கேட்டது.

தன் கனவில் கேட்ட அந்தக் குரலின்படி, அப்படி ஒரு ஆலயம் இருக்கிறதா? என்று தேடித் திரிந்தான். அதன் ஒரு பகுதியாக இந்த ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான். சிவபெருமானுக்கு அணிவிப்பதற்காக அருகம்புல் மாலை ஒன்றை கையில் தூக்கியபடி இறைவனின் கருவறையை நோக்கி சென்று கொண்டிருந்தான். அப்போது சிவபெருமானுக்கு எதிரில் இருந்த கல் நந்தி, உயிர்ப்பெற்று எழுந்து வந்து மன்னனின் கையில் இருந்த அருகம்புல் மாலையை கவ்விக் கொண்டு ஓடியது. இதையடுத்து கனவில் ஒலித்த அசரீரியின்படி ஆலயம் இதுவென்று கண்டுகொண்டான். அங்குள்ள சிவபெருமானை வழிபட்டான். அவனது நோய் முற்றிலுமாக நீங்கியது. இதையடுத்து அந்தக் கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்தான்.

கோச்செங்கண்ண மன்னன், சிவபெருமானுக்கு பல மாடக் கோவில்களை கட்டியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டால், நோய் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. புல் தின்ற கல் நந்திக்கு பிரதோஷ நேரத்தில் அருகம்புல் மாலை அணிவித்து பிரார்த்தனை செய்தால் கேட்டவரத்தை அருளுவார் என்பது நம்பிக்கை.

அரிவாள் தாய நாயனார்

மருத குலத்துக்கே உரிய சிறப்புகளுடன், நீள்நெறிநாதர் ஆலயத்திற்கு அருகே கண்ணமங்கலம் என்ற ஊர் இருந்தது. அந்த ஊரில் தாயனார் என்ற சிவனடியார் வசித்து வந்தார். அவர் தனது ஊரில் பயிர்த் தொழில் செய்து வந்தார். செல்வந்தரான இவர் தினமும் நீள்நெறி நாதரை வணங்கி வழிபட்டு வந்தார். அப்போது செந்நெல் அரிசியில் செய்த உணவும், செங்கீரையும், மாவடுவும் கொண்டு நைவேத்தியம் படைப்பார். இது அனுதினமும் நடைபெறும் ஒரு சம்பவம். தாயனின் தொண்டுக்கு, அவரது மனைவியும் பக்கபலமாக இருந்தார். இருவரும் சிவபக்தியில் சிறந்தவர்களாக இருந்து வந்தனர்.

 

கணவன்-மனைவி இருவரையும் சோதித்துப் பார்க்க இறைவன் திருவுளம் கொண்டான். தாயரின் செல்வம் குறைந்து வறுமை சூழ்ந்து கொண்டது. தனது நிலத்தில் ஆட்களை வேலைக்கு வைத்து பயிர்த் தொழில் செய்து வந்தவர், வறுமையின் காரணமாக தானே கூலியாக வேறு ஒருவரின் நிலத்தில் சென்று வேலை பார்க்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டார். அப்போதும் தனக்கு கிடைக்கும் நெல்லை அரிசியாக்கி இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். கணவனும், மனைவியும் தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்தனர்.

ஒரு நாள் செந்நெல் அரிசி உணவு, மாவடு, செங்கீரை போன்றவற்றை கூடையில் வைத்து நீள்நெறி நாதர் ஆலயம் நோக்கிச் சென்றார் தாயன். அவரது மனைவியும் பின் சென்றார். பசி மயக்கத்தின் காரணமாக ஓரிடத்தில் தாயன் தடுமாறி விழப்போக, அவரை அவரது மனைவி தாங்கிப் பிடித்தார். இருப்பினும் கூடை சரிந்து, அரிசி, கீரை, மாவடு அனைத்தும் மண்ணில் விழுந்து வீணாகிப்போயின.

நாள் தவறாது செய்து வந்த நைவேத்தியம் இன்று பாழ்பட்டுப் போனதே என்று எண்ணி வருந்தினார். அவரால் அந்த துக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இனி உயிரோடு இருப்பதில் எந்த மகிழ்ச்சியும் இல்லை என்ற முடிவுக்கு வந்த தாயன், தன்னிடம் இருந்த கதிர் அறுக்கும் அரிவாள் கொண்டு, தன்னுடைய கழுத்தை அறுக்க முன் வந்தார். அப்போது மண்ணுக்குள் இருந்து ருத்திராட்சம் அணிந்து, திருநீறு பூசப்பட்ட கை ஒன்று வெளி வந்து, தாயனின் கரத்தை பிடித்துத் தடுத்து நிறுத்தியது. ஆம்! அது சிவபெருமானின் திருக்கரம். இறைவனின் திருக்கரம் தன்னை தடுத்தாட்கொண்டதும் மெய்மறந்து அப்படியே நின்று போனார் தாயன். பின்னர் சிவபெருமானும், பார்வதி தேவியும் இடப வாகனத்தில் தாயனுக்கும், அவரது மனைவிக்கும் காட்சியளித்தனர். அப்போது முதல் அரிவாள் தாய நாயனார் (அரிவாட்டாய நாயனார்) அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராக இருக்கும் பேறு பெற்றுள்ளார்.

நடராஜர்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இத்தல இறைவனை, வியாக்ரபாத முனிவரும், பதஞ்சலி முனிவரும் வணங்கி வழிபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வழிபட்ட சிவலிங்கம் தனிச் சன்னிதியில் உள்ளது. மேலும் சூரியன், சந்திரன் போன்ற சன்னிதிகளும் உள்ளன. இத்தலத்தில் உள்ள நடராஜர் சிலை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. பொதுவாக அனைத்து கோவில்களிலும் நடராஜரின் தலையில் வீற்றிருக்கும் கங்காதேவி, இத்தல நடராஜரின் பாதத்தில் இருந்து அருள்பாலிக்கிறார்.

சோழர்களால் கட்டப்பட்ட இந்த ஆலயம், தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 110-வது தலமாக விளங்குகிறது.

சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் குருந்த மரம், தலவிருட்சமாக இருக்கிறது. தல தீர்த்தம், ஓமக தீர்த்தமாகும். காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.

Read Entire Article