புதுடெல்லி,
சமீபகாலமாக திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தங்களது பல வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும் இணைந்துள்ளார். வீரேந்திர சேவாக், ஆர்த்தி என்பவரை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வீரேந்திர சேவாக் - ஆர்த்தி தம்பதி தங்களின் 20 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஒருவருக்கொருவர் பின் தொடர்வதை (follow) நிறுத்தி உள்ளனர்.
முன்னதாக, வீரேந்திர சேவாக் தனது தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார். அப்புகைப்படங்களில் அவரது மகன் மற்றும் அவரது தாயார் இடம்பெற்றிருந்தனர். ஆனால் அவரது மனைவி ஆர்த்தி இல்லை. மேலும், பாலக்காட்டில் உள்ள விஸ்வ நாகயக்ஷி கோவிலின் படங்களையும் சேவாக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அதிலும் அவரது மனைவி இல்லை. இதனால் இந்த தம்பதிக்கு இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. விவாகரத்து தொடர்பாக வீரேந்திர சேவாக் மற்றும் ஆர்த்தி சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.