வேங்கை வயல் விவகாரம்; 3 பேருக்கு தொடர்பு - தமிழக அரசு

5 hours ago 2

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி பட்டியல் சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் இவ்வழக்கு 2023ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. வழக்கமான சட்ட நடைமுறைகளின்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சுதர்சன், முத்துக்கிருஷ்ணன், முரளிராஜா ஆகிய மூன்று பேருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பிருப்பதாகவும் சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முரளி ராஜா பொய் தகவலை பரப்பியதாகவும், சுதர்சன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி மனிதக் கழிவை தண்ணீரில் கலந்ததாகவும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.  சம்பவம் நடந்து சுமார் 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில்,  முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையை மனுவாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கு விசாரணை பிற்பகலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article