பெங்களூரு: பெங்களூருவில் மனைவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த வழக்கில் கைதான சாப்ட்வேர் நிறுவன மேலாளர் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறார் என்றும் அவர் மனைவியை கொலை செய்யும் நோக்கத்துடன் பெங்களூருவுக்கு வந்ததாக சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மகாராஷ்டிராவை சேர்ந்த ராகேஷ் ராஜேந்திரா கெடேகர்(37) தனது மனைவி கவுரி சம்பேகருடன் பெங்களூரு வந்து ஹுலிமாவு என்ற இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். ராகேஷ் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பிராஜெக்ட் மேலாளராக இருக்கிறார். மாஸ் மீடியா படித்துள்ள கவுரி வேலை தேடிக்கொண்டிருந்தார். இந்த தம்பதியினருக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்ந்தது. கடந்த 26ம் தேதி தம்பதிக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராகேஷ், கவுரியை சரமாரியாக தாக்கினார். கத்தியை எடுத்து மனைவியை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கவுரி உயிரிழந்தார்.
பின்னர் உடலை துண்டு,துண்டாக வெட்டி பெரிய சூட்கேஸில் அடைத்தார். சூட்கேசை குளியலறையில் விட்டு அங்கிருந்து புனேவுக்கு தப்பி சென்றார். ஒரு நாள் கழித்து மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்ட ராகேஷ் தான் கவுரியை கொன்று விட்டதாகவும், அவரது உடலை சூட்கேசில் அடைத்து போட்டுள்ளதாகவும், கூறினார்.
அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக பெங்களூரு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வீட்டில் சூட்கேசில் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த உடல் பாகங்களை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெங்களூரு போலீசார் மகாராஷ்டிராவுக்கு சென்று ராகேஷை கைது செய்தனர்.
கள்ளக்காதல் தகராறில் கவுரி கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் விவகாரமா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘‘ ராகேஷ் மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறார். ஆ அசாதாரணமாக நடந்து கொள்வதன் மூலம் அனுதாபத்தை தேட முயற்சிக்கிறார். கொலை செய்யும் திட்டத்துடன் கவுரியை பெங்களூருவுக்கு அழைத்து வந்ததாக சந்தேகிக்கிறோம். கொலை நடந்த பிறகு குடியிருப்பின் தரை தளத்தில் வசிக்கும் பிரபு சிங் என்பவருக்கு போன் செய்து தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாகவும் இது பற்றி போலீசிடம் தெரிவிக்குமாறு கூறி விட்டு சென்றுள்ளார். இது போலீசை தவறாக வழிநடத்தும் முயற்சியாகவே கருதுகிறோம்’’ என்றார்.
The post மனைவியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து வைத்த ஐடி நிறுவன மேலாளர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடிக்கிறார்: பெங்களூரு போலீசார் தகவல் appeared first on Dinakaran.