ஆலந்தூர்: சென்னை பரங்கிமலை ரயிலில் செல்ல சுரங்கப்பாதை அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று படிக்கட்டில் ஏறி பிரதான கவுன்டரில் டிக்கெட் வாங்கி பின்னர் ரயிலில் செல்வார்கள். ஆதம்பாக்கம் வழியாக வரும் ரயில் பயணிகள், கூட்ஸ் செட் ரோடு பகுதியில் உள்ள கவுன்டரில் டிக்கெட் வாங்கி அங்குள்ள படிக்கட்டில் ஏறி ரயில் பயணம் செய்கின்றனர்.
இந்தநிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே புதியதாக ஒரு டிக்கெட் கவுன்டரும் ஆதம்பாக்கம் மேடவாக்கம் சாலையையொட்டி புதிதாக ஒரு டிக்கெட் கவுன்டரும் அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பழைய
2 டிக்கெட் கவுன்டர்களும் மூடப்பட்டது. இதில் பரங்கிமலை சுரங்கப்பாதை வழியாக படிக்கட்டு ஏறி ரயில் நிலையம் செல்லக்கூடிய பிரதான பாதையை இரும்பு ஷட்டர் கேட்டு போட்டு மூடியுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்டுள்ள நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், ‘’தங்களது ஜீவாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கவுன்டர் இடமாற்றம் செய்ததில் ஆட்சேபனை இல்லை. ஆனால் ரயில் ஏறி செல்லும் பாதையை மூடியதால் நடைபாதை வியாபாரம் பாதிக்கப்படுகின்றனர்’ என்றனர்.
இதுசம்பந்தமாக தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான தா.மோ.அன்பரசனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தா.மோ.அன்பரசன், பரங்கிமலை சர்வீஸ் சாலை வழியாக சென்று இரும்பு ஷட்டர் கேட்டு போட்டு மூடப்பட்ட பகுதியை பார்வையிட்டார். அப்போது ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என். சந்திரன், ஆதம்பாக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார் உள்பட பலர் இருந்தனர். அப்போது வியாபாரிகளும் ஆட்டோ ஓட்டுநர்களும் அமைச்சரை சந்தித்து, ‘’தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மூடப்பட்ட இரும்பு ஷட்டரை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டனர். ‘’ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அமைச்சர் கூறினார்.
The post டிக்கெட் கவுன்டர் இடமாற்றப்பட்டதால் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பிரதான பாதை மூடப்பட்டது: வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் பாதிப்பு appeared first on Dinakaran.