மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை உயிருடன் 7 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்த கணவர்: மீரட் சம்பவத்தை போல் அரியானாவில் பயங்கரம்

3 days ago 2

ரோஹ்தக்: மீரட் சம்பவத்தை போல் அரியானாவில் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை 7 அடி ஆழத்தில் குழி தோண்டி உயிருடன் புதைத்த கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் அமெரிக்க கடற்படை நிறுவன அதிகாரி சவுரப் ராஜ்புத் என்பவரை, அவரது மனைவி முஸ்கன் ரஸ்தோகியும், கள்ளக்காதலன் சாஹில் சுக்லாவும் சேர்ந்து 15 துண்டுகளாக வெட்டி அந்த உடலை காலி டிரம்மில் போட்டு கான்கீரிட் கலவையால் மூடி சமாதியாக்கினர். இந்த கொலை வழக்கு நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

இப்போது, ​​மீரட்டில் நடந்த கள்ளக்காதல் கொலையை போன்று அரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதாவது அரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியில் அமைந்துள்ள பாபா மஸ்த்நாத் பல்கலைக்கழகத்தில் யோகா ஆசிரியராக ஜக்தீப் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் கடந்தாண்டு டிசம்பர் 24 அன்று கொலை செய்யப்பட்டார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் ஜகதீப்பின் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘ஜஜ்ஜார் மாவட்டம் மண்டோதி கிராமத்தைச் சேர்ந்த ஜக்தீப் என்பவர், கடந்த டிசம்பர் 24ம் தேதி கல்லூரிக்கு பணிக்கு சென்றவர் அன்று மாலை வீடு திரும்பினார். பின்னர் அவரை காணவில்லை. சம்பவம் நடந்து 10 நாட்களுக்குப் பிறகு, அதாவது பிப்ரவரி 3ம் தேதி ஜகதீப் மாயமானதாக சிவாஜி காலனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குபதிந்து ஜக்தீப்பை கடந்த 3 மாதங்களாகத் தேடி வந்தனர்.

இறுதியாக, ஜகதீப்பின் செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் தனிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவல்களின்படி ஜகதீப்பை கொன்ற ஹர்தீப், தரம்பால் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்த பிறகு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. உண்மையில், ஜக்தீப் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்தார். அதே வீட்டில் ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருந்தார். இதனை அந்தப் பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். இருந்தும் ஜக்தீபிற்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான உறவு தொடர்ந்தது. எனவே ஜகதீப்பை தீர்த்துக் கட்ட அந்தப் பெண்ணின் கணவர் முடிவு செய்தார். சம்பவ நாளன்று அவரது வீட்டிற்கு சென்ற ஹர்தீப்பும் அவரது நண்பர் தரம்பாலும், ஜகதீப்பை கடுமையாக தாக்கி அவரது கைகளையும் கால்களையும் கட்டினர்.

சத்தம் போடாமல் இருக்க வேண்டி அவரது வாயில் டேப்பை போட்டு கட்டினார். பின்னர் ரோஹ்தக்கிலிருந்து 61 கி.மீ தொலைவில் உள்ள சர்கி தாத்ரியின் பாண்டவாஸ் கிராமத்திற்கு காரில் கடத்தி சென்றனர். அவர்கள் திட்டமிட்டப்பட்டபடி வெறிச்சோடிய வயலில் 7 அடி ஆழத்திற்கு குழி தோண்டினர். பின்னர் ஜகதீப்பை உயிருடன் மண்ணில் புதைத்தனர். தற்போது 7 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஜகதீப்பின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை மற்றும் தடவியவில் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த யோகா ஆசிரியரை உயிருடன் 7 அடி ஆழத்தில் குழி தோண்டி புதைத்த கணவர்: மீரட் சம்பவத்தை போல் அரியானாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Read Entire Article