மனைவியின் தகாத உறவை கண்டித்த பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது

3 hours ago 2

சிவகாசி: சிவகாசி அருகே, மனைவியின் கள்ளக்காதலை கண்டித்த பட்டாசு ஆலை தொழிலாளி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கள்ளக்காதலன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே, சாத்தூர் ரோட்டில் உள்ள சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). பட்டாசு ஆலை தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கற்பகத்திற்கும், முருகன் காலனியைச் சேர்ந்த மாரிமுத்து (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இது கருப்பசாமிக்கு தெரியவரவே அவர், மனைவி மற்றும் மாரிமுத்துவை கண்டித்துள்ளார். இருப்பினும் இருவரது கள்ளக்காதலும் தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று மாலை சமரசம் பேசலாம் என கருப்பசாமியை முருகன் காலனி பகுதிக்கு மாரிமுத்து அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாரிமுத்துவின் உறவினர்களான குமார் (28), கணேசன் (45), எலி என்ற ஜோசப் (22) ஆகியோர் இருந்துள்ளனர். பேச்சுவார்த்தையில் மனைவியுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கருப்பசாமி, மாரிமுத்துவை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மாரிமுத்து அவரது உறவினர்கள் சேர்ந்து அரிவாளால் கருப்பசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.

இதில் படுகாயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிவகாசி பகுதியில் சுற்றித்திரிந்த மாரிமுத்து உள்ளிட்ட 4 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவு பிடித்து கைது செய்தனர்.

The post மனைவியின் தகாத உறவை கண்டித்த பட்டாசு தொழிலாளி வெட்டிக் கொலை: கள்ளக்காதலன் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article