வேலூர்: கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளை கடும் வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாப்பது எப்படி? என கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வரும் ஏப்ரல், மே மாதம் அக்னியில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது. தற்போது அனலுடன் வெயிலும் கொளுத்தி வருவதால் மக்கள் தவிக்கின்றனர்.இதேபோல் கால்நடைகளும் வெயில் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் கோடை காலங்களில் பராமரிப்பு முறைகள் குறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோடையில் ஈக்களின் தொல்லையால் கறவை மாடுகள் அமைதி இன்றி காணப்படும். ஈக்கள் அவற்றின் மீது அமர்வதாலும் கறவை மாடுகளை சுற்றி வட்டமிடுவதாலும் அவைகளுக்கு தொந்தரவு ஏற்படும். இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். ஈக்களின் தொல்லையை தடுக்க தொழுவங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சாணம், சிறுநீர் போன்ற கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். முடிந்தவரை கடுமையான வெப்ப காலங்களில் கறவை மாடுகள் மீது 2 அல்லது 3 முறை தண்ணீர் தெளிக்கலாம். வெயில் அதிகமாக இருக்கும்போது மேய்ச்சலுக்கு விடக்கூடாது. வெப்பத்தின் அளவு குறைவாக உள்ள காலையிலும் மாலையிலும் மேய்ச்சலுக்கு அனுப்புவது நல்லது. கோடை காலங்களில் இறைச்சி கோழிகளின் இறப்பு விகிதம் அதிகளவில் இருக்கும். வெயில் காலங்களில் முட்டை கோழிக்கு 2.5 சதுர அடியும், இறைச்சி கோழிக்கு 15 சதுர அடியும் இடவசதி வேண்டும். பக்கவாட்டில் சாக்குகளை தண்ணீரில் நனைத்து தொங்கவிட வேண்டும். வெப்பம் அதிகம் காரணமாக தளர்ச்சி அடையும்போது விட்டமின் சி 500 மில்லி கொடுக்கலாம்.
எருமை மாடுகளையும் தோல் பசு இனத்தின் தோலை விட 5 மடங்கு கெட்டியானது. கறவை எருமை மாடுகளை சினை பருவத்திற்கு வரும் அறிகுறிகள் கோடையில் வெளிப்படையாக தெரியாது. இதனை ஊமைப்பருவம் என்று அழைப்பர். கோடைகாலத்தில் எருமை மாடுகளின் இனவிருத்தி திறனை அதிகரிக்க நிழலான இடத்தில் கட்டி பராமரிக்க வேண்டும். அருகில் குளங்கள் இருந்தால் தண்ணீரில் நீந்த விடலாம். அவ்வசதி இல்லாவிட்டால் நீரை கால்நடைகள் மீது தெளித்து வெப்பத்தை குறைக்கலாம். எருமை மாடுகளை எப்போதும் கட்டி வைக்காமல் விசாலமான அடைப்புகளில் சுதந்திரமாக திரிய விட வேண்டும்.
கோடையில் ஏற்படும் வறட்சியினால் ஆடுகளுக்கு உணவு கிடைப்பது அரிது. கோடையில் குடற்புழு தொல்லை இருப்பதால் குடற்புழு நீக்கம் செய்வது நல்லது. இவ்வாறாக விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை பராமரித்து கோடை வெயில் தாக்கத்திலிருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிப்பது எப்படி?: அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.