
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு மாவட்டம் மகலூ கிராமத்தை சேர்ந்தவர் ரத்னகர் (வயது 40). இவருக்கு மனைவி மற்றும் 6 வயதில் மவ்யா என்ற மகளும் இருந்தனர். இதனிடையே, குடும்ப பிரச்சினை காரணமாக ரத்னகரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதனால், ரத்னகர் தனது மகள் மவ்யாவை மாமியார் ஜோதி (வயது 50) வீட்டில் விட்டுள்ளார். சிறுமி அங்கு வளர்த்து வந்தார். ஜோதியின் இளைய மகள் நந்தினி சிந்துக்கும் (வயது 24) திருமணமாகி கணவர் அவினாஷ் (வயது 38) அதே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரத்னகர் நேற்று இரவு மாமியார் வீட்டிற்கு துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அங்கு தனது மகள் மவ்யா, மாமியார் ஜோதி, அவரது மகள் சிந்து, மருமகன் அவினாஷ் ஆகியோரை சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் தனது குழந்தை, மாமியார், சிந்து ஆகிய 3 பேர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவினாஷ் காலில் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இதையடுத்து, அதே துப்பாக்கியால் ரத்னகர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்த அவினாசை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளிக்கூடத்தில் சக மாணவ, மாணவிகள் தனது மகளிடம் அவரின் தாய் குறித்து கேட்டதாகவும், இது குறித்து தந்தையிடம் மவ்யா அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். இதனால் குடும்பத்தின் நிலைக்கு மனைவி பிரிந்து சென்றதுதான் காரணம் என எண்ணி ஆத்திரமடைந்த ரதனகர், மகள், மாமியார் உள்பட 3 பேரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.