தொடர்ந்து தவறிழைக்கும் தோல் தொழிற்சாலைகள் பாலாற்றை மாசுபடுத்தினால் திகார் சிறைதான்: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

4 hours ago 1

புதுடெல்லி: பாலாற்றை மாசுபடுத்தினால் திகார் சிறைக்கு அனுப்பி வைப்போம் என்று கடுமையாக எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய இழப்பீட்டை தவறு செய்த தொழிற்சாலைகளிடம் இருந்து வசூலித்து மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பாலாற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2011ம் ஆண்டு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. முதலாவதாக நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்கிய தீர்ப்பில்,‘‘பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரும் பாதிப்படைகின்றனர். தொழிற்சாலைக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகிய இரண்டும் இணைந்து ஆலோசனை நடத்தி உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர்கள் அடங்கிய ஒரு புதிய கமிட்டியை உருவாக்க வேண்டும். உத்தரவு பிறப்பித்த இன்றைய(நேற்று) நாள் முதல் அடுத்த ஆறு வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்க மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தொகையை பாலாற்றில் கழிவுகளை கலந்து தவறிழைத்த தொழிற்சாலைகளிடம் இருந்து மாநில அரசு வசூல் செய்து கொள்ளலாம். அதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது.

குறிப்பாக வேலூரில் தோல் தொழிற்சாலைகள் சட்டவிதிகளை மீறி செயல்பட்டால் மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதில் எந்தவித சமரசமும் இருக்க கூடாது. பலமுறை கூறியும் தொழிற்சாலைகள் தொடர்ந்து பாலாற்று நீரை மாசுபடுத்தினால் தொழிற்சாலைகளின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையை கூட மாநில அரசு மேற்கொள்ளலாம். அதற்கான அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. தற்போது இந்த வழக்கை தற்காலிகமாக முடித்து வைக்கிறோம்.

இருப்பினும் இந்த விவகாரத்தில் அடுத்த நான்கு மாதம் கழித்து உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரணை மேற்கொள்ளும். அப்போது இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், உருவாக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்வோம். இந்த விவகாரத்தில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் முன்னதாக வழங்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்கிறது” என்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஜே.பி.பரிதிவாலா, “பாலாற்றை மாசுபடுத்தும் விவகாரத்தில் தற்போது பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவின் நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால் கூட சம்பந்தப்பட்டவர்களை திகார் சிறைக்கு அனுப்புவோம். கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க மாட்டோம். இதனை தவறிழைக்கும் தோல் தொழிற்சாலைகள் புரிந்து செயல்பட வேண்டும். குறிப்பாக இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் வழங்கியது ஒரு தலைசிறந்த தீர்ப்பு ஆகும்” என்று கூறினார். இதையடுத்து வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

The post தொடர்ந்து தவறிழைக்கும் தோல் தொழிற்சாலைகள் பாலாற்றை மாசுபடுத்தினால் திகார் சிறைதான்: உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article