புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றி, கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றிய பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்ய உள்ளார். அடுத்த நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கி 2 கட்டமாக நடத்தப்படும்.
அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுடன் முதல் கட்ட நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 13ம் தேதி வரையிலும், 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4ம் தேதி வரையிலும் நடக்க உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஜனாதிபதி திரவுபதி முர்மு காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றி கூட்டத்தொடரை இன்று தொடங்கி வைப்பார்.
அதைத் தொடர்ந்து, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மக்களவையில் நாளை தாக்கல் செய்வார். இது அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட். முன்னதாக, அவர் இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்கட்ட கூட்டத்தொடரின் இறுதியாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தும் பேசுவார்.
இக்கூட்டத் தொடரில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா, வங்கி சட்டங்கள் திருத்த மசோதா, ரயில்வே சட்டத்திருத்த மசோதா, பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா, எண்ணெய் வயல்கள் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு சட்டத்திருத்த மசோதா, விமான குத்தகை தொடர்பான மசோதா மற்றும் குடியேற்றம், வெளிநாட்டினர் மசோதா உட்பட 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
எனவே, முக்கியமான இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவை கோரும் வகையில் ஒன்றிய அரசு தரப்பில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஜெய்ராம் ரமேஷ், சுரேஷ், கவுரவ் கோகாய், பிரமோத் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுதிப் பந்தோபாத்யாய், டெரெக் ஓ பிரையன், ஆர்எஸ்பி கட்சியின் என்.கே.பிரேமச்சந்திரன், பிஜேடி மூத்த தலைவர் சஸ்மித் பத்ரா, திமுக எம்பி டி.ஆர்.பாலு, சமாஜ்வாடி எம்பி ராம் கோபால் யாதவ், ஜேஎம்எம் கட்சியின் மஹுவா மாஜி, என்சிபி-எஸ்பி எம்பி பவுசியா கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், மகா கும்பமேளாவில் உபி அரசு முறையான ஏற்பாடுகளை செய்யத் தவறியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியான விவகாரம் குறித்து கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். மேலும், வக்பு வாரிய மசோதா குறித்து ஆலோசிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு உரிய மதிப்பளிக்கப்படவில்லை என எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.
இது குறித்தும் அவையில் விவாதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர். எனவே இந்த விவகாரங்கள் கூட்டத்தொடரில் பெரும் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன. அந்த மசோதாவை கூட்டத்தொடரின் முதல் வாரத்திலேயே நிறைவேற்ற அரசு தரப்பு குறியாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தால் கடும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* குழு முடிவு செய்யும்
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ‘‘சில விவகாரங்கள், கோரிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதில் எந்த விவகாரங்களை விவாதித்திற்கு எடுத்துக் கொள்வது என்பது குறித்து அலுவல் ஆலோசனை குழு முடிவு செய்யும்’’ என்றார்.
* வக்பு வாரிய மசோதா மீண்டும் தாக்கல்
வக்பு வாரிய சொத்துக்களை நிர்வகிப்பதில் முக்கிய மாற்றங்களை கொண்டு வரும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. பாஜ எம்பி ஜெகதாம்பிகா பால் தலைமையில் இரு அவைகளைச் சேர்ந்த எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு மசோதா குறித்து ஆய்வு செய்தது.
இதில் எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த அனைத்து திருத்தங்களும் நிராகரிக்கப்பட்டன. பாஜ எம்பிக்கள் வலியுறுத்திய 14 திருத்தங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கூட்டுக்குழு முடிவு குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சூழலில் சில திருத்தங்களுடன் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
* தமிழகத்துக்கு நிதி பிரச்னை எழுப்ப திமுக திட்டம்
நாடாளுமன்ற படஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தி.மு.க எம்பிக்கள் டி.ஆர் பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் டெல்லியில் கூட்டாக அளித்த பேட்டியில்,\\” துணை வேந்தர் நியமனத்தில் யு.ஜி.சி தலையீடு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டு குழு தலைவரின் செயல்பாடு, அரசியல் சாசனத்துக்கு எதிராகவும் அரசியல்வாதி போன்றும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கம் செய்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது ஆகியவை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தினோம். தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிதி விடுவிப்பு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த விவாதம் செய்யவும் அனுமதி கோரியுள்ளோம் என்றனர்.
* இந்தியா கூட்டணி கூட்டாக செயல்படும்
அனைத்து கட்சி கூட்டத்திற்கு பின் பேட்டி அளித்த காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறுகையில், ‘‘பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து பிரச்னைகளையும் இந்தியா கூட்டணி கூட்டாக எழுப்பி அரசுக்கு அழுத்தம் தர எதிர்க்கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கும்பமேளா அரசியலாக்கப்பட்டு விஐபிக்களுக்கே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இதுவே மோசமான நிர்வாக ஏற்பாட்டால் நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் முக்கியமாக எழுப்பப்படும்’’ என்றார்.
* ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
* ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார். அதைத் தொடர்ந்து நாளை ஒன்றிய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்வார்.
* இக்கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
* மகா கும்பமேளா நெரிசல், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார், நாளை ஒன்றிய பட்ஜெட் தாக்கல் appeared first on Dinakaran.