ஒரு நிறுவனத்தின் மூலம் வாங்குவதாக இருந்தால், அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்.குறிப்பிட்ட மனையினுடைய தாய்ப்பத்திரத்தின் ஒரிஜினல் சரியாக உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.குறைந்தது 30 வருடங்களுக்கான வில்லங்கச் சான்றிதழை (ஈ.சி) சரிபார்க்க வேண்டும். இதனால் சொத்து யாரிடமிருந்து யாருக்கு கைமாறியுள்ளது எனும் விவரம் தெரியவரும்.
குறிப்பிட்ட மனைக்கு சி.எம்.டி.ஏ. அல்லது டி.டி.சி.பி. அங்கீகாரம் உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இந்த அங்கீகாரம் இருந்தால்தான் அது அங்கீகரிக்கப்பட்ட மனையாகும். அரசு வங்கி கடன் உதவிகள் பெறமுடியும்.
பட்டா உள்ள மனைகளை வாங்குவதே நல்லது. பட்டா மனையாக இருந்தால் அதில் எப்போது வேண்டுமானாலும், வீடு கட்டலாம். வாங்கும் இடத்திற்கான நிலவரி கடந்த வருடங்களில் முறையாக கட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மனையின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய இது உதவும். வரி ரசீது அவர் பெயரில்தான் இருக்கும். ஒருவேளை வரி முறையாக கட்டப்பட்டிருக்கவில்லை என்றால் அதை நீங்கள் கட்ட நேரிடும்.
சொத்து விஷயங்களை டீல் செய்யும் வழக்கறிஞரை பார்த்து, அவர் மூலம் குறிப்பிட்ட மனையில் வில்லங்கங்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.குடியிருப்பு, பள்ளிக்கூடம் என கட்டுமான தன்மைக்கேற்ப கட்டுமான விதிகள் இருக்கும். அந்த விதிமுறைகளுக்கும் குறிப்பிட்ட மனை உட்பட்டது என்பதை உறுதி செய்தல் நல்லது.
மனை அவர்கள் சொல்லும் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும். வாங்கப் போகும் மனைக்கு அருகில் அரசு சார்ந்த பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலைய வேலைகள், சாலை வேலைகள் என ஏதேனும் நடக்கிறதா நகரமயமாக்கலுக்கு உரிய அடையாளங்கள் ஏதேனும் தென்படுகிறதா என்பதை கவனிக்கவும். உங்கள் மனைக்கு அருகாமையில் குறைந்தபட்ச தொலைவிலாவது சுகாதார நிலையம், ஊராட்சி அலுவலகங்கள், கிராமப்புற பஞ்சாயத்து அலுவலகங்கள், குடிநீர் தேக்கங்கள் இவைகள் இருக்கின்றனவா எனவும் சோதித்துக் கொள்ளவும். உங்கள் மனையிலிருந்து அரசு சார்ந்த போக்குவரத்து வசதிகளை பெறுவதற்கு எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளவும்.
– மல்லிகா குரு, சென்னை.
The post மனை வாங்க போகிறீர்களா? appeared first on Dinakaran.