நித்யா பராக்ரமாடோப நிரீக்ஷண ஸமுத்ஸுகா
நாம் தொடர்ந்து பண்டாசுர யுத்தத்தைத்தான் பார்த்துக் கொண்டே வருகிறோம். அந்த யுத்தத்தில் அம்பிகையினுடைய படைகளை குறித்தும், அந்தப் படைகள் எப்படி நமக்குள் அத்யாத்மமாக செயல்படுகின்றது என்கிற தத்துவார்த்தத்தையும் பார்த்துக் கொண்டே வருகிறோம். மேலும், அம்பிகையானவள் ஒவ்வொரு தேவதைகளாக எப்படி இருக்கிறாள் என்றும் பார்த்தோம். சக்தி சேனா சமன்விதா என்று சேனைகளில் இருக்கக் கூடிய சக்திகளை பார்த்தோம். மந்த்ரிணீ, வாராஹி என்று பார்த்தோம். இப்போது இந்த நாமாவானது ஸ்ரீவித்யா சம்பிரதாயத்திலுள்ள திதி நித்யா தேவிகளைப்பற்றி பேசுகின்றது. திதி நித்யா தேவிகள் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். ஸ்ரீ சக்ர பூஜையிலேயேயும் சரி, கட்க மாலா பாராயணத்திலும் சரி, இந்த திதி நித்யா தேவதைகள் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும்.
பதினைந்து நித்யா தேவதைகளின் ரூபத்தில் அம்பாள் இருக்கிறாள். இந்தப் பதினைந்து தேவதைகளுக்கும் நித்யா தேவதைகள் என்று பெயர். காமேஸ்வரி நித்யா, பகமாலினி நித்யா, நித்யக்லின்னா நித்யா, பேருண்டா நித்யா, வஹ்னி வாஸினி நித்யா, மஹா வஜ்ரேஸ்வரி நித்யா, சிவதூதி நித்யா, த்வரிதா நித்யா, குல ஸுந்தரி நித்யா, நித்யா நித்யா, நீலபதாகா நித்யா, விஜயா நித்யா, ஸர்வ மங்களா நித்யா, ஜ்வாலா மாலினி நித்யா, சித்ரா நித்யா என்று பதினைந்து ரூபங்களில் அம்பாள் இருக்கிறாள். இந்த பதினைந்து நித்யாவிற்கு அடுத்து பதினாறாவதாக மகாநித்யாவாக அம்பிகையான லலிதா திரிபுரசுந்தரி இருப்பாள். அதாவது நடுவில் மகாநித்யா என்று சொல்லக் கூடிய மகாதிரிபுரசுந்தரி. அவளைச் சுற்றி பதினைந்து நித்யா தேவிகள். ஏன், இவர்களை திதி நித்யா தேவதைகள் என்று சொல்கிறோம்? ஸ்ரீவித்யாவில் ஒருமுறை உண்டு.
அந்தந்த திதிக்கு அந்தந்த நித்யா தேவதைகளை சொல்வது வழக்கம். அமாவாசைக்கு அடுத்து வரக்கூடிய வளர்பிறை சுக்ல பட்சத்தில் பிரதமையிலிருந்து பௌர்ணமி வரைக்கும் இருக்கக்கூடிய அந்த பதினைந்து நாட்களில், ஒவ்வொரு திதிக்கும் ஒரு நித்யா தேவதைகள் உண்டு. அந்தந்த திதியில் அந்தந்த நித்யா தேவதையின் மந்திரத்தைச் சொல்லி, அந்த தேவதையை ஆராதனம் செய்வது என்பது விசேஷமானது. அதற்குப் பிறகு, பௌர்ணமிக்குப் பிறகு கிருஷ்ண பட்சத்தில் தேய்பிறையில் இந்த திதி நித்யா தேவிகளை அப்படியே பின்னாலிலிருந்து (reverse order) ஆராதானம் செய்ய வேண்டும். அதாவது பௌர்ணமிக்கு அடுத்துள்ள அமாவாசை வரை ஆராதனம் செய்யும் வழக்கம் உண்டு. முதல் வளர்பிறையிலிருந்து பதினைந்தாவது நித்யா வரையிலும் பின்னர், தேய்பிறையில் பதினைந்தாவது நித்யாவிலிருந்து ஒன்றாவது நித்யா வரையிலுமாக என்று ஆராதனை செய்வதுதான் சம்பிரதாயத்தில் உள்ள விஷயம். அப்போதுதான் ஒரு மாதம் முழுமை பெறும்.
இந்த நித்யா தேவதைகளுக்கும் சந்திரனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அம்பிகை என்றாலே அது சந்திரனோடு தொடர்பு கொண்டதுதான். அம்பிகையின் பூஜையை மாலை அல்லது இரவு நேரத்தில் செய்வதுதன் விசேஷமாகும். அதேபோல் பௌர்ணமியோடும் தொடர்பு உண்டு.இப்போது மீண்டும் விஷயத்திற்கு வருவோம். இந்த திதி நித்யா தேவதைகளானது இந்த பண்டாசுர யுத்தத்தில் அம்பிகையினுடைய சேனையில் இருக்கிறாள். அப்படி இருக்கும்போது இந்த பண்டாசுரனுக்கு பதினைந்து படைத் தலைவர்கள் இருக்கிறார்கள். இந்த பதினைந்து படைத் தலைவர்களை அம்பிகையினுடைய சக்ர ராஜரதத்தை சுற்றி வளைப்பதற்கு அனுப்புகிறான். தாக்குவதற்கு அனுப்புகிறான்.
இப்படி பதினைந்து படைத் தலைவர்களும் அம்பிகையின் சக்ரராஜ ரதத்தைச்சுற்றி நிற்கும்போது அம்பாளிடமிருந்து வெளிப்பட்ட பதினைந்து நித்யா தேவதைகள் அங்கு தோன்றி ஒவ்வொரு நித்யா தேவதையும் ஒவ்வொரு படைத்தலைவனை சம்ஹாரம் செய்கின்றது. இந்தப் பதினைந்து நித்யா தேவதைகளும் இந்தப் பதினைந்து அசுரத் தலைவர்களையும் சம்ஹாரம் செய்வதைப் பார்த்து, அம்பாள் மிகவும் சந்தோஷப்படுகின்றாள். அப்படி அவள் சந்தோஷப்படுகின்றாள் என்பதே இந்த நாமத்தினுடைய விஷயமும் ஆகும். நித்யா தேவதைகளினுடைய பராக்கிரமத்தைப் பார்த்து சந்தோஷப்படக்கூடிய லலிதா மகாதிரிபுரசுந்தரி என்பதுதான் இந்த நாமத்தினுடைய விஷயம். இந்த பராக்கிரமம் எப்படி இருக்கிறதெனில், வளர்ந்து கொண்டே இருக்கக்கூடிய பராக்கிரமமாக இருக்கின்றது. அதைப் பார்த்து அம்பாள் சந்தோஷப்படுகின்றாள். இப்போது சாதகனுடைய ஒவ்வொரு நிலையையும் பார்த்துக் கொண்டே வருகின்றோம். இதற்கு முன்னால் சொல்லப்பட்ட சக்தி சேனா சமன்விதாவாக இருக்கட்டும்… ஜ்வாலா மாலினியாக இருக்கட்டும். ஒவ்வொன்றும் என்ன உள்ளர்த்தம் காண்பிக்கின்றது என்று பார்த்தோம்.
இப்போது இந்த நாமாவானது என்ன காண்பித்துக் கொடுக்கின்றது என்று பார்க்க வேண்டும். நித்யா தேவதைகளின் பராக்கிரமத்தைப் பார்த்து அம்பாள் சந்தோஷப்படுகிறாள் என்பது நாமம். லலிதோபாக்கியானத்தில் அதற்கான விளக்கம் இருக்கிறது. பதினைந்து அசுரப் படைத் தலைவர்கள் வந்ததாகவும், அம்பாளினுடைய இந்தப் பதினைந்து திதி நித்யா தேவதைகளும் போரில் வென்றதாகவும், அப்படி வென்றதைப் பார்த்து அம்பிகை சந்தோஷப்பட்டாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தச் சரித்திரத்தில் முக்கியமான விஷயம் என்னவெனில், ராத்திரி வேளையில் இந்தப் பதினைந்து அசுரர்களும் வந்து போர் செய்தார்கள் என்று வருகின்றது. உண்மையில் போருக்கு இருக்கக்கூடிய தர்மம் என்னவெனில், இரவினில் போர் செய்யக் கூடாது. இரவினில் போர் நடக்காது. மகாபாரதத்தில் கூட சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னால் போர் நிகழாது. ஆனால், லலிதோபாக்கியானம் ராத்திரி வேளையில் இந்த அசுரர்கள் தாக்கியதாக சொல்கிறது. இதற்கு என்ன அர்த்த மெனில், நாம் பார்க்கக்கூடிய இந்த பண்டாசுர யுத்தம் என்பது நாம் சொல்லக்கூடிய மற்ற போர் மாதிரி கிடையாது. அதாவது இந்த physical planeல் நடக்கக்கூடிய சண்டை கிடையாது. இது பௌதீகமான ஒரு போர் கிடையாது. அது spiritual plane ல் நடக்கக்கூடிய ஒரு அத்யாத்மமான நிலையில் நடக்கக்கூடிய போராக இருக்கிறது. ஞானத்திற்கும் அஞ்ஞானத்திற்கும் நடக்கக்கூடிய போராக இருக்கிறது. நாம் பார்க்கும் பௌதீக உலகினில் காணும், ராத்திரி பகல் போன்றவையெல்லாம் இங்கு வராது.
இன்னொன்று இந்த ராத்திரி வேளையில் இந்த பதினைந்து படைத் தளபதிகளும் வந்ததற்கு காரணம் என்னவெனில், இங்கு சொல்லக்கூடிய ராத்திரி நேரம் என்பது என்னவெனில், இந்த ஜீவாத்மாவினுடைய இந்த சாதகனுடைய அஞ்ஞானம். முழுமையான அஞ்ஞானம்தான் இந்த இருள். இந்த ராத்திரி. அந்த ராத்திரி நேரத்தில், அஞ்ஞானம் முழுவதுமாக சூழ்ந்திருக்கக்கூடிய ராத்திரி நேரத்தில் தாக்குகிறான். இந்த அஞ்ஞானத்தினுடைய வெவ்வேறு விருத்திகள்தான் இங்கு பண்டாசுரனின் படைத் தளபதிகளாக வருகிறார்கள். அஞ்ஞான விருத்திகளின் வெவ்வேறு வெளிப்பாடு. எப்படி இந்த அஞ்ஞானமானது இந்த சாதகனை பீடிக்கின்றது…. எப்படி தாக்குகிறது என்பதையும் பார்ப்போம்.
(சுழலும்)
The post மனதை பௌர்ணமியாக மாற்றும் நாமம் appeared first on Dinakaran.