நன்றி குங்குமம் தோழி
தூக்கணாங்குருவி கூடு பார்த்திருப்பீர்கள், அழகான தோற்றத்தில் மிக நேர்த்தியாக கூட்டை வடிவமைத்திருக்கும் அந்தப் பறவை. நாமும் அப்படித்தான். வாழ்வதற்கான உறைவிடத்தை நமக்குப் பிடித்தமான கட்டிட கலைகளில் வீடுகளாக அமைத்துக்கொள்கிறோம். நாம் வாழ்கின்ற வீடு வெளிப்புறத்தில் மட்டுமில்லாமல் உட்புறமும் ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து அதற்கு கூடுதல் அழகினை கொடுக்கிறோம். வீடுகளில் நாம் செய்யக்கூடிய உட்புற வடிவமைப்பு நமக்கு மன அமைதியை தரும் என்றால் அதைப்பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் கூடுகிறது தானே..? உட்புற வடிவமைப்பு பற்றியும் அவற்றின் நன்மைகள் பற்றியும் விளக்கம் அளிக்கிறார் கட்டிட கலைஞர் மற்றும் உட்புற வடிவமைப்பாளர் லட்சுமி மீனா.
உட்புற வடிவமைப்பு பற்றி…
கட்டிட வடிவமைத்தல் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். உதாரணமாக ஒரு வீட்டை கட்டமைக்கிறோம் என்றால் அதன் கட்டிட அமைப்பையும், உட்புற மற்றும் வெளிப்புற தோற்றத்தையும் உருவாக்குவதுதான். அதன் பிறகு கட்டப்பட்ட வீட்டின் சுவர் பகுதிகள், தரைப்பகுதி, வெற்றிடம் போன்றவற்றின் உட்புற வடிவமைப்பை ஆக்கப்பூர்வமாக அழகியலுடன் வடிவமைப்பதுதான்
உட்புற வடிவமைத்தல் என்கிறோம்.
வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள் என எந்த கட்டிடங்களாக இருந்தாலும் நம் விருப்பத்திற்கு தகுந்தவாறு அதன் உட்புறத்தினை வடிவமைத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும், விதிகளும் கிடையாது. ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், படைப்புத்திறனை பயன்படுத்தி விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். நிறங்கள், ஒளி, இயற்கை போன்ற அழகியலைப் பயன்படுத்தி தனித்துவமாக வீட்டிற்கான இன்டீரியரை அமைக்கமுடியும்.
மக்களின் எதிர்பார்ப்புகள்…
ஒரு உட்புற வடிவமைப்பாளராக வாடிக்கையாளர்களை சந்திக்கும் போது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரசனைகள் இருக்கும். அவர்களின் வீடு எந்த மாதிரியான அமைப்பில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். சிலர் பாரம்பரிய முறையிலும், சிலர் மாடர்னாகவும் ட்ரெண்ட்டிங்காகவும் வேண்டும் என்று கேட்பார்கள். நாங்களும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப கண்கவர் விதத்தில் அமைத்து தருகிறோம்.
வீடு, அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஒவ்ெவான்றின் உட்புற அலங்காரங்கள் மாறுபடும். ஃபேஷன் போல் இந்த அலங்காரங்களும் டிரெண்டிற்கு ஏற்ப மாறிக் கொண்டேதான் இருக்கும். சிலர் மாறி வரும் டிரெண்டினை விரும்பாமல், பாரம்பரிய முறையினையே நாடுகிறார்கள். என்றுமே நிலையான பாரம்பரிய அமைப்பில் ஒவ்வொரு இடமும் ஒரு குறிப்பிட்ட தீம்களில் வடிவமைக்க ஆசைப்படுகிறார்கள். இதில் ஒரு சிலர் இதுவரை இல்லாத புதுவிதமான டிசைன்கள் வேண்டும் என்பார்கள். வெளிநாட்டு ஸ்டைலில் வீட்டின் உட்புறத்தை அமைத்து தரும்படியும் கேட்பார்கள்.
உட்புற வடிவமைப்பை பொறுத்தவரையில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு தான் முன்னுரிமை. சில வாடிக்கையாளர்களுக்கு எந்த டிசைன்கள் வேண்டுமென்று தெளிவு இருக்காது. அவர்களுக்கு முதலில் எல்லாவிதமான டிசைன்ஸ், ஸ்டைல் மற்றும் அவர்களின் வீட்டின் கட்டமைப்பிற்கான சாத்தியக்கூறுகளை விளக்குவோம். அதைப் பார்த்த பிறகு அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். அதன் பிறகு அவர்களுக்கு விருப்பமான நிறங்கள், டிசைன்களை கேட்டு தெரிந்து கொண்டு ஒரு வரைபடத்தினை உருவாக்குவோம். வாடிக்கையாளர்களுக்கு அது பிடித்தமானதாக இருந்தால் அதனை நடைமுறைபடுத்துவோம். இல்லை என்றால் மாற்றங்களும் செய்து தருவோம்.
உட்புற வடிவமைப்பு நம் மன நலத்திற்கு சிறந்ததா?
கண்டிப்பாக… நாம் இருக்கும் இடம் அழகாக மட்டுமில்லாமல் மன அமைதியையும் தருவதாக இருத்தல் வேண்டும். உதாரணமாக அதிகமான அடர்நிறங்களால் ஆன சுவர்களுக்கு மத்தியில் அமர்ந்து வேலை செய்ய சொன்னால் நிச்சயம் நம்மால் நீண்ட நேரம் அதிக கவனத்துடன் வேலை செய்ய முடியாது. அடர் மஞ்சள், அடர் சிவப்பு நிறங்களால் அதிக கவனச்சிதறல்கள் வரலாம். அதனால் மன அழுத்தமும் ஏற்படலாம். இதனை நாம் டிசைனிங் பிளான் செய்யும் போது தவிர்த்து விடுவது நல்லது. மன அமைதியை தரக்கூடிய நிறங்கள் உள்ளன. அதனை சுவர்களுக்கு பயன்படுத்தலாம். மேலும் வீட்டிற்குள் சூரிய ஒளி வரும்படியும், இன்டோரில் வளரக்கூடிய செடிகளைக் கொண்டு நாம் வசிக்கும் இடத்தினை அழகாகவும் ஆரோக்கியமானதாகவும் மாற்றி அமைக்கலாம். பார்ப்பதற்கும் உணர்வதற்கும் அமைதியை தரக்கூடிய உட்புற வடிவமைப்புகள் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன.
முன்பெல்லாம் பலரும் அடர் நிறத்தினை தான் வீட்டிற்கு ெபயின்டிங் செய்து வந்தார்கள். அப்படிப்பட்ட வீட்டிற்குள் சில நிமிடங்களுக்கு மேல் இருக்க பிடிக்காது. மனசுக்கு அசௌகரியமாக இருக்கும். இன்று பெரும்பாலும் அடர் நிறங்களை மக்கள் விரும்புவதில்லை. வீட்டை அழகாக காட்சிப்படுத்தும் பேஸ்டல் நிறங்களையே ஆராய்ந்து தேர்வு செய்கிறார்கள். மேலும் பார்ப்பதற்கு அழகாகவும் மற்றவர்கள் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும் என்று கவனத்துடன் உட்புறத்தினை வடிவமைக்க விரும்புகின்றனர்.
எளிமையான பெயின்டிங், சின்னச் சின்ன அலங்காரங்கள் செய்தாலே போதும். அந்த இடம் அமைதியான மனநிலையை தரும். வீட்டில் உள்ளவர்களின் மனநிலையை மேம்படுத்த நிறங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் நிறங்களை மிகவும் கவனமாக தேர்வு செய்வது அவசியம். நாங்க அதற்காக கலர் தியரிகளை பயன்படுத்துகிறோம். குடியிருப்பு, வேலை செய்யும் இடங்கள், வணிக வளாகங்கள் என வெவ்வேறு பயன்பாட்டிற்கு தகுந்தாற் போல நிறங்களை பரிந்துரை செய்கிறோம்.
சிறிய வீட்டிற்கான அலங்கார சாத்தியக்கூறுகள்…
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களின் வீடு சிறியதாக இருப்பதால், அதில் இன்டீரியர் டிசைன் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள். சிறிய இடமாக இருந்தாலும், அதற்கு ஏற்ப அழகாகவும், ஆக்கப்பூர்வமாகவும், தனித்துவமாகவும் வடிவமைக்க முடியும். வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பங்களை கூறும் போது, பிசினசாக பார்க்காமல், நட்புடன் அணுக வேண்டும். அப்போது அவர்களின் தேவைகளை முழுதாக புரிந்து கொண்டு அவற்றை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை அவர்களுக்கு விளக்க முடியும்.
இடம் சிறியதாகவோ, நெருக்கமாகவோ இருக்கும்பட்சத்தில் அதற்கு தகுந்தாற் போல திட்ட வரைபடங்களை உருவாக்குவதும் அதனை செயல்படுத்தி கொடுப்பதும் எங்கள் பொறுப்பு. எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் தனித்துவமான டிசைன்களில் மாற்றி அமைத்து கொடுத்திருக்கிறோம். 250 – 300 சதுரடி உள்ள இடத்திற்கும் தேவையான எல்லா பொருட்களையும் வைத்து வடிவமைத்து கொடுத்திருக்கிறோம். அதில் குறிப்பாக அவர்களின் படுக்கையறை, லிவ்விங் அறை, சமையலறை அனைத்தும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி ெகாடுப்போம். ஒவ்வொரு வாடிக்கையாளர்கள் விரும்பிய டிசைன்களை கொண்டுவருவதுதான் எங்களின் இலக்கு.
பட்ஜெட் அலங்காரங்கள்…
எல்லோராலும் பெரிய பட்ஜெட்டினை இதற்காக ஒதுக்க முடியாது. சிறிய பட்ஜெட்டில் அழகாக அமைத்து தரும்படி கேட்பார்கள். அவர்களுக்கு சின்னச் சின்ன வேலைப்பாடுகள் கொண்டு வீட்டை அலங்கரிக்க முடியும். உதாரணமாக சுவர்களுக்கு தனித்துவமான நிறங்களை கொடுக்கலாம். அதாவது, அடர் நீல நிறத்தினை கொடுத்துவிட்டு சுவர்களில் செய்யக்கூடிய வால் ஆர்ட் டிசைன்கள் ஆன்லைனில் வாங்கி வடிவமைக்கலாம். அது சுவர்களை அழகாக எடுத்துக்காட்டும். ஆக்கப்பூர்வமாகவும் எளிமையாகவும் இருக்கக்கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்தலாம். ஒரு வீட்டில் நீளமான அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி வைத்தாலே அது அழகியலை தரும். மேலும் சின்ன ஒளி விளக்குகளையும் பயன்படுத்தலாம். மேலும் பட்ஜெட்டிற்கு ஏற்ப வார்ட்ரோப் செட்டிங், ஃபால்ஸ் சீலிங், ஃபர்னிச்சர்ஸ் எல்லாமே செய்து தருகிறோம்.
இதன் தனித்துவம்…
இது கிரியேடிவ் சார்ந்த விஷயம் என்பதால், ஆக்கப்பூர்வமான பல வடிவங்களை சாத்தியப்படுத்த முடியும். உதாரணமாக வால் பேனலிங், இடவசதிகளுக்கு உபயோகமானதாக இருக்கும். சுவருடன் அலமாரிகளை இணைக்கும் போது அது இடத்தினை அடைக்காது. ஒரு சிறிய இடத்தில் உட்புறமாக அலமாரி அமைத்தால், அந்த இடத்தில் அலமாரி இருக்கிறது என்று தெரியாத வண்ணம் வடிவமைக்கலாம். பார்ப்பதற்கு சுவர் போன்றும், திறந்தால் அலமாரி போன்ற தோற்றம் அளிக்கும். இது போன்ற
வடிவமைப்புகளுக்கு அதிக இடம் தேவைப்படாது. பார்க்கவும் அழகான தோற்றம் கொடுக்கும்.
இந்த துறையின் வளர்ச்சி…
முன்பெல்லாம் வீடுகளுக்கு உட்புற வடிவமைப்பு செய்ய வேண்டுமா என்று யோசித்தார்கள். காரணம், இதைப்பற்றிய சரியான யோசனைகள் மற்றும் படைப்புகள் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் எல்லோருக்கும் இதைப்பற்றின புதுமையான யோசனைகள் உள்ளது. அதனால்தான் நாம் பார்க்கும் ஒவ்வொரு இடமும் தனித்துவமான உட்புற கட்டமைப்புகளை கொண்டவையாகத்தான் இருக்கின்றன. வடிவமைப்பாளர்களான நாங்களும் புது ஸ்டைல்களை கொடுக்க தயாராக இருக்கிறோம்.
மேலும் தற்போது இந்த துறையும் வளர்ந்து வரும் துறையாக மாறி வருகிறது. அதனால் பலரும் இதில் உள்ள வாய்ப்புகளை புரிந்து கொண்டு வடிவமைப்பாளர்களும் தங்களின் முழு திறமையையும் செயல்படுத்த முன் வருகிறார்கள். ெபாறியியல் மருத்துவம் மட்டும் இல்லாமல் மாணவர்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் வெற்றியடையலாம். இந்த துறையை பொறுத்தவரை பாலின பாகுபாடுகள் கிடையாது. கிரியேட்டிவிட்டியும் திறமையும் இருந்தால், யாராக இருந்தாலும் இந்த துறையில் ஜொலிக்க முடியும்’’ என்கிறார் லட்சுமி மீனா.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post மன அமைதி தரும் இன்டீரியர் டிசைனிங்! appeared first on Dinakaran.