சூலூர், பிப். 6: சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற மந்திரகிரி வேலாயுத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலின் தைப்பூசத் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கர்ப்ப கிரகத்தின் முன் உள்ள கொடி மரத்தில் தேர் திருவிழா துவக்க நிகழ்வாக வேத மந்திரங்கள் ஓத கொடியேற்றப்பட்டது. வரும் 11ம் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், மக்கள் பிரதிநிதிகள், பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.
நேற்று நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் சுல்தான்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பழனிச்சாமி, அறங்காவலர்கள் ஈஸ்வரன், விவேகானந்தன், நிர்மலா தேவி, ராஜேந்திரன் செயல் அலுவலர் ராஜகுரு உள்ளிட்டோர் கலந்துகொண்டு திருவிழா கொடி ஏற்றினர். இந்த கொடியேற்ற நிகழ்ச்சிக்கு சிவாச்சாரியார்கள் சுந்தர மூர்த்தி மற்றும் முத்துக்குமார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியையொட்டி சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
The post மந்திரிகிரி வேலாயுதசாமி கோயில் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.