![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39098120-chennai-08.webp)
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று(12.02.2025), புதுடெல்லியில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை மந்திரி பூபேந்தர் யாதவை சந்தித்து, தமிழ்நாடு அரசின் பல திட்டங்களுக்கு அனுமதி மற்றும் நிதி கோரி கோரிக்கை மனு அளித்தார்.
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கில், 1,50,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தொழில்துறை கொட்டகைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அறிவிப்பை வெளியிட்டமைக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரிக்கு நன்றி தெரிவித்ததுடன், ஏப்ரல் 2025 - உடன் முடிவுக்கு வரவுள்ள, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் மற்றும் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு ஆகியவற்றின் மறுசீரமைப்புக்கான அரசின் முன்மொழிவின் மீது விரைந்து அறிவிக்கை வெளியிடுமாறும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு விரைவான அனுமதி வழங்குவதற்கு ஏதுவாக ஒரு கூடுதல் மாநில வல்லுநர் மதிப்பீட்டுக் குழு அமைக்க ஏற்கெனவே அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு கருத்துருவை சமர்ப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவுக்கு விரைந்து அனுமதி வழங்குவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார்.
மேலும், இக்கலந்துரையாடலின் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர மற்றும் வன சுற்றுச்சூழல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பசுமைக் கவசத்தை உருவாக்குவதற்கான புதிய திட்டத்திற்கு காலநிலை மாற்றத்திற்கான தேசிய செயல்திட்டம் மற்றும் பசுமை இந்தியா இயக்கம் ஆகியவற்றின் கீழ் ரூ.27.53 கோடிக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்திடம் கோரப்பட்டது. இத்திட்டம் இயற்கை சார்ந்த தீர்வுகள் மூலம் மாவட்டத்தில் பல கடலோரப் பகுதிகளில் கடல் அரிப்பை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியிலிருந்து, தெங்குமரஹாடா கிராமத்தில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதற்கு தேவைப்படும் ரூ.74.4 கோடி ரூபாயை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஈடுசெய் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணைய நிதியிலிருந்து வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு கருத்துரு சமர்ப்பித்துள்ளது. அந்தப் பகுதியில் புலிகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், அடிக்கடி ஏற்படும் மனித வனவிலங்கு மோதல்கள் உள்ளூர் சமூகத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கை மனுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாநில அரசின் முயற்சிகளுக்கு தனது அமைச்சகத்தின் ஆதரவை வழங்குவதாக மத்திய மந்திரி உறுதியளித்தார். இந்நிகழ்வின்போது சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்சுப்ரியா சாகு உடனிருந்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.