
உஜ்ஜைன்,
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகத்தில் 20 வயதுடைய மாணவர் ஒருவர் விடுதியில் தங்கி, பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், அவரை சில மூத்த மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர்.
அவருடைய ஆடைகளை கிழித்தும், அவரை அடித்தும் துன்புறுத்தியதுடன், கொலை செய்து விடுவோம் என மிரட்டியும் உள்ளனர். இந்த சம்பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த மாணவர் சிகிச்சைக்காக சரக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் பற்றி மாதவநகர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதில், வேதாந்த் என்ற கிருஷ்ண உடாசி மற்றும் முகுல் உபாத்யாய் என்ற 2 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். போட்டி மற்றும் நெருக்கடி ஆகியவற்றின் விளைவால் இந்த ராகிங் நடந்துள்ளது என பாதிக்கப்பட்ட மாணவர் போலீசிடம் கூறியுள்ளார்.
இதுபற்றி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அர்பன் பரத்வாஜ் கூறும்போது, போலீசில் கடிதம் அளித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
தொடர்புடைய 5 மாணவர்களை விடுதியில் இருந்து வெளியேற்றுவதுடன், துறை சார்ந்த நடவடிக்கையாக அவர்களை வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதுபற்றி அந்தந்த துறைகளுக்கும் கடிதம் அளிக்கப்பட்டு விட்டது என அவர் கூறினார்.
யு.ஜி.சி.யின் ராகிங் ஒழிப்பு குழுவும் தானாக முன்வந்து இந்த விவகாரம் பற்றிய விசாரணையை கையிலெடுத்து உள்ளதுடன், விவரம் மற்றும் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படியும் பல்கலைக்கழகத்திடம் கேட்டு கொண்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.