
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் நல்லாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கவிதா (வயது 40), அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது ஒரே மகள் கீர்த்திவாசனி (15). பிலிக்கல்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நடந்து முடிந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை கீர்த்திவாசனி எழுதி இருந்தார். இந்நிலையில் மாணவி தான் சரியாக தேர்வு எழுதவில்லை என்று மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவிடுவோமோ என்ற தோல்வி பயத்திலும் கீர்த்திவாசனி இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் கீர்த்திவாசனி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை 9 மணி அளவில் வெளியானது. இந்த தேர்வில் கீர்த்திவாசனி 348 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று இருந்தார். மாணவி பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-
தமிழ்-70, ஆங்கிலம்-83, கணிதம்-81, அறிவியல்-70, சமூக அறிவியல்-44 என மொத்தம் 348 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கீர்த்திவாசனி தேர்ச்சி பெற்ற நிலையில், அவர் தோல்வி பயத்தால் தற்கொலை செய்து கொண்டது அவரது குடும்பத்தினர், உறவினர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அவரது தாயாா் கவிதா கதறி அழுதது அனைவரது மனதையும் உருக்கியது.