
சீர்காழி
சீர்காழியில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு சர்வாதிகார அரசாக செயல்பட முயற்சிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்து. மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிறது, அதற்குரிய தமிழகத்திற்கான நிதியை தர மறுப்பதால் 3 மாதங்களாக பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கப்படாததால் விவசாய தொழிலாளர்கள் பட்டினி கிடக்கின்றனர்.
பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் போது தமிழகத்திற்கு மறுப்பதும், தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்தான் கல்விக்குரிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி வழங்குவோம் என நிபந்தனை விதிப்பதும் ஜனநாயக நாட்டில் நடைபெறும் செயல் அல்ல.
தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 1937, 1965-ம் ஆண்டுகளில் இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒட்டுமொத்தமாக எதிர்த்து நின்றது மீண்டும் அப்படி ஒரு போராட்டத்தை நடத்த நிர்பந்தம் நெருக்கடியை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. மத்திய கல்வி மந்திரி கல்வியை அரசியல் ஆக்காதீர்கள் என்கிறார். மாநில அரசு மற்றும் மக்கள் அரசியல் ஆக்கவில்லை. தமிழ்நாடு அரசு அரசியல் செய்வதாக பழி சுமத்தி அவர் தப்பிக்க முயற்சி செய்கிறார் அது வெற்றி பெறாது. மத்திய அரசு நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.