
நியூயார்க்,
அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு உட்பட்ட பகுதியில் ஹட்சன் ஆற்றில் படகு ஒன்றில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது, படகில் தீப்பொறி பறக்கும் வகையில் நபர் ஒருவர் ஏதோ வேலை செய்து கொண்டிருந்து உள்ளார். இதில், திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும், நியூயார்க் நகர போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ பகுதிக்கு சென்றனர்.
இதில், வேலை செய்து கொண்டிருந்த அந்த நபர் தூக்கி வீசப்பட்டு தண்ணீருக்குள் கிடந்துள்ளார். சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என நியூயார்க் நகர போலீசார் உறுதி செய்தனர்.
இந்த விபத்தில், மொத்தம் 3 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் பலியாகி விட்டார். மற்றொருவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார். 3-வது நபர் மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ள மறுப்பு தெரிவித்து விட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.
விபத்தில் பலியான அந்த நபர் யார்? என்ன வயது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. வெடிவிபத்திற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. வெடிவிபத்து ஏற்பட்டதும், அந்த படகு முழுவதும் பொருட்கள் பரவி கிடந்தன. இதனால், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினரால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. அந்த நபர் யாரென்ற அடையாளம் தெரிய வரவில்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.