
சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
"இந்தியாவிலிருந்து தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் இந்த ஆண்டு (2025) புனித ஹஜ் கடமையாற்ற, சவுதி அரசாங்கம் 52,000 இந்தியர்களுக்கு ஒதுக்கீடு வழங்கியிருந்தது. இதற்காக, தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 52,000 ஹாஜிகள், பல்வேறு தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்களின் மூலமாக தலா 6 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலுத்தி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பதிவு செய்தனர்.
தனியார் ஹஜ் சர்வீஸ் நிறுவனங்கள், ஹாஜிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட கட்டணத்தை மத்திய சிறுபான்மை நலத்துறை மற்றும் சவுதி அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி முறையாக அனுப்பியிருந்தன. இந்நிலையில், சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சர்வீஸ்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட மண்டலங்களை ரத்து செய்து, அவற்றை மற்ற நாடுகளுக்கு மறு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் விளைவாக, 52,000 இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாத நிலை ஏற்பட்டுள்ளது, இது அவர்களின் ஹஜ் யாத்திரையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்தியாவின் ஹஜ் ஒதுக்கீட்டில் 70% தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் செல்கின்றனர், மீதமுள்ள 30% மத்திய ஹஜ் கமிட்டி மூலம் செல்கின்றனர். மத்திய ஹஜ் கமிட்டி மூலம் செல்லும் யாத்ரீகர்களுக்கு இந்த முடிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை, ஆனால், தனியார் நிறுவனங்கள் மூலம் செல்லும் 52,000 யாத்ரீகர்களுக்கு மினாவில் தங்குமிடம் உறுதி செய்யப்படாததால், அவர்களின் யாத்திரைத் திட்டங்கள் கேள்விக்குறியாகியுள்ளன.
மத்திய சிறுபான்மை நலத்துறையின் முறையான ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் உரிய நேரத்தில் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்திற்கு ஹஜ் யாத்ரீகர்களுக்கான கட்டணத்தை செலுத்தத் தவறியது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மத்திய சிறுபான்மை நலத்துறையின் இந்த மோசமான நிர்வாக செயல்பாடானது ஆயிரக்கணக்கான இந்தியர்களின் நீண்டநாள் கனவான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் வாய்ப்பை பறித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, மத்திய சிறுபான்மை நலத்துறையின் அக்கறையற்ற செயல்பாடுகள் காரணமாக, மக்காவில் ஹஜ் யாத்ரீகர்களுக்கான தங்குமிட கூடார ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் பல சவால்களை உருவாக்கிய நிலையில், இந்த ஆண்டு மினாவில் தங்குமிடமே இல்லாத பரிதாபகரமான நிலையை ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய தொடர் தவறுகள் திட்டமிட்ட செயலா? எனும் சந்தேகத்தை எழுப்புகின்றன. இந்த மோசமான நிர்வாக சீர்கேடுகள் கண்டிக்கத்தக்கவை.
புனித ஹஜ் கடமை என்பது இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மதக் கடமையாகவும், வாழ்நாள் லட்சியமாகவும் விளங்குகிறது. இத்தகைய அலட்சியப் போக்கு, மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதோடு, அவர்களின் நம்பிக்கையை சிதைக்கும் செயலாகவும் உள்ளது.
ஆகவே, இந்திய ஹஜ் யாத்ரீகர்களின் மத நம்பிக்கையையும், வாழ்நாள் கனவையும் பாதுகாக்க, மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தனியார் ஹஜ் சர்வீஸ்கள் மூலம் விண்ணப்பித்த 52,000 இந்திய ஹஜ் யாத்ரீகர்களும் இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கும், மினாவில் தங்குமிட ஏற்பாடுகளை உறுதி செய்யவும் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி, மத்திய அரசுடன் இணைந்து, விண்ணப்பித்த தமிழக ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும், மத்திய சிறுபான்மை நலத்துறையில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாக முறைகளை அமல்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்."
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.