
சென்னை,
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு 2 முறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அந்த வகையில், ஒவ்வொரு கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகள் எல்லாம் இப்போதே கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டன. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், ஆளுங்கட்சியான தி.மு.க.வும் தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கிவிட்டன. வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் மதுரையில் கட்சியின் பொதுக்குழுவை கூட்ட தி.மு.க. தலைமை திட்டமிட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில், அரசியல் ரீதியாகவும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. மேலும், சட்டசபை தேர்தல் தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் பணிகளில் மேலும் வேகம் காட்ட தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.