மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6ம் தேதி வரை மதுரையில் நடக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் அதிக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
நிறைவாக 6ம் தேதி நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கின்றனர். 3ம் தேதி மாலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது.
ஒன்றிய பாஜ அரசு இந்திய அரசியல் சாசனம் மாநில அரசுகளுக்கு வழங்கிய அதிகாரத்தை பறிக்க கூடிய வகையிலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி மறுப்பு, மொழி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத காரியங்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் பாஜ அல்லாத மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டு மதுரையில் நடத்தும் இக்கருத்தரங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிமுக ஆட்சி காலத்திலும் தொடர்ந்து நடந்ததுதான். திமுக ஆட்சியில் குற்றவாளிகளை கைது செய்வது, கடும் சட்ட நடவடிக்கைகள் எடுப்பது என நடவடிக்கைள் வேகமடைந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
The post மதுரையில் ஏப்ரல் 3ம் தேதி மாநில உரிமை பாதுகாப்பு கருத்தரங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு appeared first on Dinakaran.