சென்னை: வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒன்றாக சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணமோசடியில் ஈடுபட்டதாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக சேர்த்து சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.