மதுரை: மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கனமழை கொட்டித்தீர்த்தது. களத்துக்குச் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளது. காலை முதல் மாலை வரை 10 செ.மீ பதிவாகியுள்ளது.
மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை காரணமாக மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி பள்ளி கல்லூரிகளில் இருந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் கூட கடும் இன்னலுக்கு ஆளாகினர்.
தென்கிழக்கு அரபிக்டல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய இடி, மின்னல், பலத்த காற்றுடன் கன மழை கொட்டியது.
மதுரையில் மாசிவீதி, ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி போன்ற பல இடங்களில் கனமழை மழை பெய்தது. கிடாரிப்பட்டி பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சர்வேயர் காலனிபாரத் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
நேற்றிரவு ஒருமணி நேரம் பெய்த மழையின் காரணமாக தேங்கிய மழைநீரே பல இடங்களில் இன்னும் முழுமையாக வெளியேறாத சூழலில், இன்று பிற்பகல் பெய்த மழை மேலும் சிக்கலுக்கு வழிவகுத்தது.
பாதிக்கப்பட்ட மக்கள் இதுதொடர்பாக கூறுகையில், “பலமுறை மழைநீர் தேங்குவது தொடர்பாக அரசிடம் தெரிவித்துவிட்டோம். வீடுகளுக்குள்ளும் தண்ணீர் சென்றுவிட்டது. பாம்பு, பூரான் போன்றவைகளும் இருக்கின்றன. குழந்தைகளை வைத்துக்கொண்டுதான் வாழ்கிறோம்” என வேதனையுடன் தெரிவித்தனர்.
மதுரையில் கனமழை பெய்து வருவதால் உடனடியாக களத்துக்குச் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மழை பாதிப்புகளை கேட்டறிந்து பணிகளை முடுக்கிவிடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரையில் பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரையிலான ஒரு மணி நேரத்தில் 8.3 செ.மீ. மழை பொழிந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
The post மதுரையில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொட்டித்தீர்த்த கனமழை: களத்துக்குச் சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.