
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்ற திருவிழாவாகும். இந்தாண்டு சித்திரை பெருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்றைய தினத்தில் இருந்து மீனாட்சி, சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருகிறார்கள். விழாவில் 7-ம் நாளான நேற்று நந்திகேசுவரர் வாகனத்தில் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும், யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினார்கள். பின்னர் மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
இந்த நிலையில், சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் சூடும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இரவு 7.35 மணிக்கு மேல் 7.59 மணிக்குள் அம்மன் சன்னதியில் உள்ள 6 கால் பீடத்தில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அப்போது மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் சூட்டி, நவரத்தினத்தால் ஆன செங்கோலை வழங்கி பட்டத்து அரசியாக முடி சூட்டப்பட்டது.
அதில் மீனாட்சி அம்மனிடமிருந்த செங்கோல் அம்மன் பிரதிநிதியான மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜனிடம் வழங்கப்பட்டது. அவர் செங்கோலை பெற்று கொண்டு சுவாமி சன்னதி 2-ம் பிரகாரம் வழியாக வலம் வந்து மீண்டும் மீனாட்சி அம்மனிடம் செங்கோலை ஒப்படைத்தார்.
பின்னர் மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் பவனி வந்து காட்சி தந்தார். பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மற்றொரு வெள்ளி சிம்மாசனத்தில் வீதி உலா வந்தனர். பட்டத்து அரசியான மீனாட்சியை காண 4 மாசி வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் மதுரையில் இன்று முதல் மீனாட்சி அம்மன் ஆட்சி தொடங்கியுள்ளது. இதனால் சித்திரை திருவிழாவும் களை கட்டியுள்ளது.