
மதுரை,
மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் 5 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்குள்ள லிப்டில் அதிகாலையில் 3 ஆண்கள், 2 பெண்கள், ஒரு கைக்குழந்தை என மொத்தம் 6 பேர், 2-வது மாடிக்கு செல்வதற்காக ஏறி உள்ளனர். இதுபோல், அவர்கள் பூஜை பொருட்களும் கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், லிப்டில் எடை அதிகமாக இருந்ததால், மேல்நோக்கி நகர முடியாமல், அவர்கள் 6 பேரும் அதில் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து திடீர்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அதிநவீன கருவிகளை பயன்படுத்தி லிப்டில் சிக்கி தவித்த கைக்குழந்தை உள்ளிட்ட 6 பேரையும் பத்திரமாக மீட்டனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதிக எடை காரணமாக பழுது ஏற்பட்டு லிப்ட் பாதியில் நின்றது தெரியவந்தது.