
கோவை,
தமிழ்நாட்டில் வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்காக அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்துள்ளது. இதனை சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தெரிவித்தார். அப்போது அமித்ஷா, தேர்தலுக்கு பின்னர் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்றார். இது மிகப்பெரிய விவாதப்பொருளாகியது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கூட்டணி அரசு என மத்திய மந்திரி அமித்ஷா கூறவில்லை. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி, தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று தான் சொன்னார். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி ஜெயித்தாலும், ஆட்சியில் பங்கு இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். இருப்பினும் இதுபற்றி பல்வேறு கருத்துகள் ஊடகங்களில் வந்துகொண்டு இருக்கின்றன.
இந்தநிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட்டுள்ள நிலையில், கட்சி தலைமையின் அனுமதி இன்றி கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க. திடீர் கட்டுப்பாடு விடுத்துள்ளது.
அதிமுகவை கட்டுப்பாடு விதித்ததை தொடர்ந்து, பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைய வேண்டும் என்று கூறிவந்தது தற்போது நிறைவேறி இருக்கிறது. அ.தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து பா.ஜ.க.வினர் யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் எந்தக் கருத்தும் வெளியிட வேண்டாம். கூட்டணி விவகாரங்களை பா.ஜ.க. தலைமை பார்த்துக்கொள்ளும். ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க. ஆட்சியை அகற்றுவதுதான் நமது ஒரே குறிக்கோள் என்று நயினார் நாகேந்திரன் செங்கல்பட்டில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
இந்தநிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் கோவை கணபதி பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் புத்துணர்வு சிகிச்சை பெறுவதற்காக வருகை புரிந்திருந்தார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை முடிந்து இன்று அவர் தேனி புறப்பட்டார். அவரை கட்சியினர் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். சிகிச்சை முடிந்து வெளியில் வரும் பொழுது செய்தியாளர்கள் அவரிடம் அதிமுக-பாஜக கூட்டணி குறித்தும் அந்தக் கூட்டணி வெற்றி பெறுமா? என்றும் கேள்வி எழுப்பினர், அதற்கு "இன்று லீவு, வந்திருந்த அனைவருக்கும் நன்றி.. புனித வெள்ளி வாழ்த்துக்கள்" என்று பதிலளித்து விட்டு புறப்பட்டார். முன்னாள் முதல்-அமைச்சர் ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் என்.டி.ஏ கூட்டணியில் உள்ளதாக பாஜக கூறி வருகிறது குறிப்பிடத்தக்கது.