
சித்திரை திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நடந்து வருகிறது. மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் நாள்தோறும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர். சித்திரைத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் நேற்று காலை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டம்
இந்த நிலையில், சித்திரைத்திருவிழாவின் 11-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மற்றொரு முக்கிய விழாவான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசுவரர்-பிரியாவிடை அம்மன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். காலை 6 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க மாசி வீதிகளில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
முருகப்பெருமானும், விநாயகர் பெருமானும், நாயன்மார்களும் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் செல்கின்றனர். அசைந்து வரும் தேரை காண்பதற்காக சங்கு முழங்கியபடியும், இசை வாத்தியங்கள் முழங்கியபடியும், அரகரா சிவசிவா முழக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்துள்ளனர். பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துவருகின்றனர். தேரோட்டத்தையொட்டி, மாசி வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரைக்கு வரும் கள்ளழகர்
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவை தொடர்ந்து அழகர்கோவில் சித்திரை விழாவில் முக்கிய வைபவங்கள் தொடங்க இருக்கின்றன. அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நாளை (10-ந் தேதி) மாலை 6 மணிக்குமேல் புறப்படுகிறார். வழிநெடுக சுமார் 500 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், 12-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலையில் வைகை ஆற்றில் இறங்குகிறார். இதைக்காண பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிகிறார்கள்.