
போபால்,
மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ஏகலைவ்யா ஆதர்ஷ் என்ற பெயரில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வரும் முதல்வர் மற்றும் நூலக ஊழியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது முற்றி மோதலில் முடிந்தது. இதுபற்றிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதில், அந்த பெண் ஊழியர் சத்தம் போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் பிடித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த முதல்வர், ஊழியரை அறைந்ததுடன், செல்போனை பறித்து, தரையில் வீசினார்.
இதற்கு அந்த பெண் ஊழியர், உங்களுக்கு எவ்வளவு தைரியம் மேடம்? என்னை அறைந்து விட்டீர்கள் என கேட்டதுடன், செல்போன் உடைந்து விட்டது என கூறினார். அந்த முதல்வர், செல்போனை எடுத்து மீண்டும் தரையில் வீசியதில் அது உடைந்து போனது.
நீங்கள் எப்படி என்னுடைய செல்போனை உடைக்கலாம்? எப்படி அறையலாம்? என பெண் ஊழியர் கேட்டுள்ளார். இவற்றை முதல்வர் அவருடைய செல்போனில் படம் பிடிக்க தொடங்கினார். இதனால், ஆத்திரமடைந்த அந்த ஊழியர், முதல்வரை கையில் அடித்துள்ளார்.
இதன்பின்னர் இருவருக்கும் தகராறு முற்றியது. இருவரும், குடுமிப்பிடி சண்டை போட்டுள்ளனர். முதல்வரின் துப்பட்டாவை இழுத்து ஊழியர் தூர வீசினார். அதற்கு பதிலடியாக, அவரை பிடித்து இழுத்து, முதல்வர் அடித்து தாக்கினார். இருவரும் ஒருவரையொருவர் அடித்து கொண்டனர். முடியை பிடித்து, இழுத்து சண்டை போட்டனர்.
இதனை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை. எனினும், பெண் பணியாளர் ஒருவர் அவர்கள் இருவரையும் அமைதியாக இருக்கும்படி கேட்டபடி, சண்டையை தடுக்க முற்பட்டார். இந்த சம்பவம் பற்றிய வீடியோ ஒன்று வைரலானது. இருவரும் அவர்களுடைய பணியில் இருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சண்டையை தடுக்க முயன்ற பெண்ணை பலரும் இணையதளத்தில் பாராட்டி வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய பணியில் உள்ள அவர்கள், பள்ளியிலேயே ஒருவருக்கொருவர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.