மதுரை டைடல் பார்க் தொடர்பான வழக்கு: தடை விதிக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!!

2 hours ago 1

டெல்லி: மதுரையில் டைடல் பார்க் அமைப்பதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை மாட்டுத்தாவணி அருகில் 9.56 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு டைடல் பார்க் அமைத்து வருகிறது. இது தற்போது அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் வருவாய் ஆவணங்களில் வண்டியூர் குளம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் நீர் நிலைப் பகுதியில் டைடல் பார்க் கட்டிடம் கட்ட அனுமதிக்க கூடாது; தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீர்நிலைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் மயில்சாமி பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில், வண்டியூர் குளம் இருந்த இடத்திலேயே தற்போது மாட்டுத்தாவணி பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்தத் பகுதி 45 ஆண்டுகளுக்கு முன்பாக மறு வரையறை செய்யப்பட்டது எனக் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஆவணங்களை ஆய்வு செய்த ஐகோர்ட் கிளை, மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு இருந்த இடத்திலேயே தற்போது டைடல் பார்க் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டுமே பொதுமக்களின் நலனுக்காகனது எனக் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. 44 ஆண்டுகளுக்குள் முன்னர் நிலம் வகைப்படுத்தப்பட்டுள்ளதே, அப்படி இருக்கையில் இதை நீர்நிலை என எப்படி கருத முடியும்? என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், இந்த மனுவை ஏற்கமுடியாது என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

The post மதுரை டைடல் பார்க் தொடர்பான வழக்கு: தடை விதிக்க கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article