டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, எத்தனை இந்திய விமானங்கள் இழந்தோம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஏப்ரல் 22 ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் தீவிரவாதிகளின் பல முகாம்கள் அழிக்கப்பட்டன. 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு தெரிவித்ததற்காக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், தமது கேள்விகளுக்கு பதில் கூறாமல், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மவுனம் காப்பது ஏன் என்றும் வினவியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய விமானப்படைக்கு எத்தனை விமானங்கள் இழப்பு ஏற்பட்டது என்று மீண்டும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். ராணுவ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது தவறு மட்டும் அல்ல என்றும் அது குற்றம் என்றும் ராகுல் பதிவிட்டுள்ளார். அதே சமயம் உண்மையை நாடு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதே கேள்வியை ஞாயிற்றுக்கிழமை அன்றும் ராகுல் காந்தி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய வீடியோ ஒன்றையும் நேற்று ராகுல் காந்தி, வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அமைச்சர் ஜெய்சங்கர் ‘‘தாக்குதலை தொடங்குவதற்கு முன் பாகிஸ்தானுக்கு ஒரு தகவல் அனுப்பப்பட்டது. அதில், தீவிரவாத கட்டமைப்புகளை தாக்குவோம். பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் நடத்த மாட்டோம். அதன் மூலம் பாகிஸ்தான் ராணுவம் தலையீடு செய்யாமல் இருந்திருக்கலாம்.ஆனால் அந்த நல்ல அறிவுரையை அந்த நாடு ஏற்கவில்லை’’ என்று அவர் பேசுவதை கேட்க முடிகிறது.
The post ராணுவ தாக்குதல் குறித்து பாகிஸ்தானிற்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்தது குற்றம் : ஒன்றிய அமைச்சர் மீது ராகுல் காந்தி காட்டம் appeared first on Dinakaran.