மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் நாளை தண்ணீர் திறப்பு

15 hours ago 4

மதுரை சித்திரை திருவிழாவில், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறும். இதை முன்னிட்டு வைகை அணையில், போதுமான நீர் இருப்பு இருந்தால் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழா, வருகிற 12-ந்தேதி அதிகாலை 5.45 முதல் 6.05 மணிக்குள் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்த நிலையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவுக்காக, வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை மாலை 6 மணிக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், இரவில் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவத்திற்கும் மற்றும் வைகை ஆற்று படுகையினை நனைப்பதன் மூலம் குடிநீர் திட்ட கிணறுகளின் நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காகவும் வைகை அணையிலிருந்து நாளை மாலை 6 மணி முதல் 12-ந்தேதி காலை 6 மணி வரை 216 மில்லியன் கன அடி தண்ணீரினை திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article