மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027 பிப்ரவரி மாதம் முடிக்க இலக்கு: ஆர்டிஐ கேள்விக்கு நிர்வாகம் பதில்

2 months ago 12

மதுரை: ‘மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027ம் ஆண்டு, பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ரூ.1118.35 கோடிக்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது’ என்று ஆர்டிஐ ஆர்வலரின் கேள்விக்கு அதிகாரி பதில் தெரிவித்துள்ளார்.மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் குறித்து தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மதுரை எய்ம்ஸின் மத்திய பொது தகவல் அலுவலர் அளித்த பதில் வருமாறு:

மதுரை எய்ம்ஸ் கட்டுமான ஒப்பந்தத்தின் படி தற்போது பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ கல்விசார் கட்டிடம், நர்சிங் கல்லூரி, மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், உணவுக்கூடம், வெளி நோயாளிகள் பிரிவு, சேவை பிரிவு கட்டிடங்கள் ஆகியவற்றிற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையை சேர்ந்த லார்சன் அண்டு டூப்ரோ கட்டுமான நிறுவனத்துடன் ரூ.1118.35 கோடிக்கு (ஜிஎஸ்டி வரி சேர்க்காமல்) கட்டுமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

22, மே 2024 அன்று கட்டுமானம் தொடங்குவதற்கு கடிதம் வழங்கப்பட்டு 33 மாதங்களில் (பிப்ரவரி 2027க்குள்) முடிப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்சிற்கான திட்ட மதிப்பீடு ரூ.2021.51 கோடிகள் ஆக நிர்ணயம் செய்யப்பட்டு 33 மாதங்களில் மொத்தப் பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2,18,927 ச.மீ பரப்பளவில் மருத்துவமனை கட்டிடங்கள், மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள், விடுதி கட்டிடங்கள், ஆசிரியர்கள் குடியிருப்புகள், உணவகங்கள், விளையாட்டுக் கூடங்கள் கட்டப்பட இருக்கின்றன.

தற்காலிக கட்டிடங்களாக திட்ட அலுவலகம், சேமிப்பு கிடங்குகள், கான்கிரீட் தயாரிப்பு ஆலை, மெடிக்கல் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான கட்டிடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை 2026க்குள் முடியும் என்று ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2027ம் ஆண்டு தான் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று ஆர்டிஐ மூலம் தெரியவந்து உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகளை 2027 பிப்ரவரி மாதம் முடிக்க இலக்கு: ஆர்டிஐ கேள்விக்கு நிர்வாகம் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article