
மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தனியாக விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியில் 15 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலையில் விடுதியில் இட்லி, சாம்பார், சட்னி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உணவை சாப்பிட்டுவிட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள், எழுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவர்களை சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது மாணவர்கள் நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 24 மணி நேரம் அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் சுகாதாரத் துறையினர் விடுதியில் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீர் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அரசு விடுதியில் உணவருந்திய 15 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.