* தமிழக முதல்வர் அறிவிப்பிற்கு வரவேற்பு அதிகரிப்பு
மதுரை: தமிழ்நாட்டின் 8 அரசு மருத்துவமனைகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவு’ துவக்கும் நடவடிக்கையில் மதுரை அரசு மருத்துவமனை வேகம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கீழ்பாக்கம், தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவுகள் (கிளினிக்கல் எபிடெமியாலஜி) நிறுவி, இதன் மூலம் தொற்று நோயியல் மற்றும் புள்ளி விபர சேவைகள் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவானது தொற்று நோயியலின் ஒரு துணைப் பிரிவாகும். தொற்றுநோய்கள் தொடர்புடைய பிரச்னைகளில் இப்பிரிவு ஆழமான கவனம் செலுத்தும்.
1938ல் அமெரிக்க மருத்துவ ஆய்வுக்கான சங்கத்தில் உரையாற்றியபோது ஆய்வாளர் இயீன் பால் முதன்முதலில் ‘மருத்துவ தொற்றுநோயியல்’ என்ற சொற்பிரயோகத்தை அறிமுகப்படுத்தினார். ‘மருத்துவத்தின் அடிப்படை அறிவியல்’ என்றும் இதனைக் குறிப்பிடுகின்றனர். மேலும் இது குறித்து மதுரை அரசு மருத்துவமனையின் கம்யூனிட்டி மெடிசின் துறைத்தலைவர் டாக்டர் அருண்குமார் யோகராஜ் கூறியதாவது, ஒரு தொற்றோ, தொற்றில்லா நோயோ எப்படி பரவியது, கட்டுப்படுத்துவது, பின்னரும் பரவாது தடுப்பது என ஆய்வுகளின் புள்ளி விபர சேவைகளை மேம்படுத்தும் வகையில் மதுரைக்கு அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவை அரசு அறிவித்துள்ளது வரவேற்பிற்குரிய அற்புத திட்டம். நோய் பரவலுக்கான காரணம் கண்டறிந்து, முழுமையாக அதனை கட்டுப்படுத்தவும், அது சார்ந்த புள்ளிவிபரங்களை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு செயல்பாடுகளை வேகப்படுத்தவும் இது உதவுகிறது.
கொரோனா காலங்களில் இது சார்ந்த பணிகள் மிகப்பெரும் பலனைத் தந்தன. காரண காரியத்தை கண்டுணரலாம். தொற்றுக்கான கிருமி, பாதிக்கப்படுவோர், சூழ்நிலை அறியலாம். தொற்றில்லாத டைபாய்டு போன்றவை சுத்தமற்ற தண்ணீர் வழி பரவுமெனில், நோய் பவரலுக்கான வாசல் துவங்கி, எந்த காலத்தில் அதிகரிக்கும், குறையும் எனத்தெரிந்து சிகிச்சை மட்டுமே தராமல், திட்டமிட்டு அதன் ஆரம்பம், பரவல் என முழு விபரத்துடன், சரியான தீர்வு வழங்கலாம். இதுவரை அட்மிட், டிஸ்சார்ஜ் என்ற மேலோட்ட கணக்கெடுப்பே இருக்கும். இந்த புதிய பிரிவுக்கென தனியாக நியமிக்கும் ஆய்வாளர்களால் பெறப்படும் புள்ளி விபரங்கள் மருத்துவ உலகில் மகத்தான நோய்த்தடுப்பு விழிப்புணர்வை தரும். மதுரையின் ஒரிடத்தில் குறிப்பிட்ட பகுதி, குறிப்பிட்ட நோய் பரவலுக்கு ஆளானால், உரிய கண்டுபிடிப்பினால் பரவலை தடுத்து கட்டுக்குள் கொண்டு வரலாம்.
கொரோனா உள்ளிட்ட தொற்றோ, அழுக்கான தண்ணீரால் பரவும் கிட்னி பாதிப்பு போன்ற தொற்றில்லாததோ எதுவாகினும் புள்ளிவிபரங்கள், களப்பணியால் முன்னதாகவோ, பிறகோ தடுக்க முடியும் என்பதால் இப்பிரிவு மதுரைக்கு கிடைத்த வரப்பிரசாதம். இவ்வாறு அவர் தெரிவித்தார். மதுரை அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ்குமார் கூறும்போது, ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள கம்யூனிட்டி மெடிசின் எனும் சமுதாய மருத்துவத் தனித்துறையின் கீழ், அரசு அறிவித்துள்ள இந்த அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவு ஏற்படுத்தப்படுகிறது. இப்பிரிவுக்கான முழுமையான அறிவிப்புகள் வந்ததும், விரைவாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மதுரை அரசு மருத்துமவனையில் இதற்கான முழுமையான அனைத்துவித வசதிகளும் இருப்பதால், இதன் வழி சேவைகளை விரைந்து நாம் வழங்கலாம்’’என்றார்.
கொரோனா உள்ளிட்ட தொற்றோ, அழுக்கான தண்ணீரால் பரவும் கிட்னி பாதிப்பு போன்ற தொற்றில்லாததோ எதுவாகினும் புள்ளிவிபரங்கள், களப்பணியால் முன்னதாகவோ, பிறகோ தடுக்க முடியும் என்பதால் இப்பிரிவு மதுரைக்கு கிடைத்த வரப்பிரசாதம்.
The post மதுரை அரசு மருத்துவமனையில் வருகிறது அதிநவீன மருத்துவ நோய் பரவியியல் பிரிவு: நோய்த்தடுப்பு விழிப்புணர்வை தரும் அற்புத திட்டம் appeared first on Dinakaran.