மதுராந்தகம் அருகே மழைமலை மாதா கோயிலில் தேர் திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது

3 months ago 17

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற மழைமலை மாதா கோயிலின் 56ம் ஆண்டு தேர் திருவிழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மழைமலை மாதா கோயில் முழுவதிலும் வண்ண சரவிளக்குகள், மலர்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. முன்னதாக, நேற்று மாலை கொடியேற்றும் நிகழ்ச்சியை முன்னிட்டு மழைமலை மாதா கொடியை அச்சிறுப்பாக்கம் ஜங்ஷன் பகுதியில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக மழைமலை மாதா கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் ஆகியோர் பங்கேற்று, மழைமலை மாதா கோயிலின் தேர் திருவிழாவுக்கான கொடியை ஏற்றிவைத்தனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். மேலும், மழைமலை மாதா கோயிலில் நாளை மாலை 6 மணியளவில் தேர் திருவிழா நடைபெறுகிறது. இக்கோயில் வளாகத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 5 தேரில் மழைமலை மாதா, அந்தோணியார், புனித சூசையப்பர், நிக்கேல் அதித்தூதர், தோமையார் ஆகியோரின் திருவுருவங்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, மீண்டும் மழைமலை மாத கோயிலை சென்றடையும். இந்நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மழைமலை மாதா கோயில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 

The post மதுராந்தகம் அருகே மழைமலை மாதா கோயிலில் தேர் திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article