மதுராந்தகம் அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை: மகளின் பிரசவத்திற்காக சென்றபோது துணிகரம்

1 month ago 4

மதுராந்தகம், நவ. 21: மதுராந்தகம் அருகே மகளின் பிரசவத்திற்காக சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுராந்தகம் அருகே கருங்குழி பேரூராட்சி, சாத்தானி தெருவை சேர்ந்தவர் மேகநாதன் (60). இவர், சென்னையில் வசிக்கும் தனது மகளின் பிரசவத்துக்காக, கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்துடன் சென்னைக்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை பூட்டியிருந்த மேகநாதனின் வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து மேகநாதனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. தகவல் அறிந்து சென்னையில் இருந்து விரைந்து வந்தார். பின்னர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.

அப்போது, வீட்டுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் புகுந்து பீரோவை உடைத்து, அதில் வைத்திருந்த 60 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடந்த 3 நாட்களாக மேகநாதனின் வீடு பூட்டப்பட்டிருப்பதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு, அன்று நள்ளிரவில் கொள்ளை சம்பவத்தை நடத்தியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த புகாரின்பேரில் மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த 3 நாட்களுக்கு முன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்ற மேகநாதன், அதன்பிறகு நாள்தோறும் இவர் மட்டும் கருங்குழிக்கு வந்து சென்றுள்ளார். எனினும், இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டுக்கு வரவில்லை.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அன்று இரவு மர்ம நபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா, இன்ஸ்பெக்டர் முத்துகுமார், சப் – இன்ஸ்பெக்டர் தேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் டைகர் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதேப்போல் காஞ்சிபுரத்தில் இருந்து கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post மதுராந்தகம் அருகே பரபரப்பு வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை: மகளின் பிரசவத்திற்காக சென்றபோது துணிகரம் appeared first on Dinakaran.

Read Entire Article