சென்னை: சட்டசபையில் நேற்று மதுரவாயல்-சென்னை துறைமுகம் இடையேயான மேம்பால பணிகள் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எம்எல்ஏ ஈஸ்வரன் கொண்டு வந்தார். அவர், மத்திய அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது 16 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிடப்பட்ட பாலம் அது. பொருளாதார முன்னேற்றத்திற்கு அது உறுதுணையாக இருக்கும். அந்த பாலத்தை கட்டி முடித்த பின்னர் அதற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று பேசினார்.
இதற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்த விளக்கம் வருமாறு:
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து அந்த பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த பாலத்தை மீண்டும் கட்டவேண்டும் என்று பிரதமரிடத்திலும், மத்திய மந்திரி நிதின் கட்கரியிடமும் நேரடியாக கடிதம் கொடுத்து வலியுறுத்திய பிறகு, அதை மீண்டும் கட்ட வாய்ப்பு கிடைத்தது.
அதற்கு திட்ட மதிப்பீடு ரூ.3,570 கோடி. மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் டெண்டர் எடுத்து அந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உயர்மட்ட சாலை மொத்தம் 21 கி.மீ. நீளமுள்ளது. அது இரண்டு பகுதியாக அமைகிறது. மேல் பகுதி, மதுரவாயலில் இருந்து புறப்பட்டு நேரடியாக துறைமுகத்திற்கு வந்துவிடும். கீழ்ப் பாலம், 6 இடங்களில் இறங்கு பாலங்களாகவும், 7 இடங்களில் ஏறு பாலங்களாகவும் அமைந்திருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அந்த பாலம் அமைக்கப்படுவதால், பல்வேறு இனங்களில் ஒப்பந்தங்கள் போடப்பட்டன. ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அங்குள்ள சில இடர்பாடுகளை சொன்னார்கள்.
கூவம் ஆற்றில் 15 கி.மீ. தூரம் வரை அந்த பாலம் செல்கிறது. அதற்கு நீர்வளத் துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். அதற்கு தடையற்ற சான்றிதழ் வாங்கி, அந்தப் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கூவம் ஆற்றங்கரையில் இருக்கும் பொது மக்களுக்கு வேறொரு இடத்தில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு குடியிருப்பு ஏற்படுத்தித் தர வேண்டிய பணிகள் என பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதற்கு 20.5.2026 வரை ஒப்பந்தம் இருக்கிறது. அந்தப் பணிகளை முடிப்பதற்கும், அந்த பாலத்தை விரைவாக கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத் துறை முழு ஒத்துழைப்பை வழங்கும்.
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பெருக வேண்டுமென்ற அடிப்படையில்தான் வெளிநாட்டு மூலதனங்களை எல்லாம் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் முதல்வர் ஈடுபட்டிருக்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த பாலம் அமைப்பதற்கு அரசு அத்தனை முயற்சியையும் எடுக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மதுரவாயல்-சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலை பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் அமைய முயற்சி எடுப்போம்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.