
ஆலந்தூர்,
தரமணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் செந்தில் இவர் நேற்று மாலை சாதாரண உடையில் கிண்டி, மடுவின்கரை மேம்பாலம் மீது காரில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த முருகேகசன் என்பவர் பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் விபத்து ஏற்படுத்திய போலீஸ்காரர் செந்தில் காரை நிறுத்தாமல் அங்கி இருந்து ஓட்டி சென்றார். அவரை பொதுமக்கள் விரட்டி சென்று கத்திபாரா மேம்பாலம் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அப்போது காரை ஒட்டிய போலீஸ்காரர் செந்தில் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. அவரை விசாரணைக்காக இன்று காலை போலீஸ் நிலையம் வர அழைத்து இருந்தனர். இதற்கிடையே போலீஸ்காரர் செந்தில் விபத்து ஏற்படுத்திய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும் விபத்து குறித்து செந்திலிடம் நெருக்கமானவர்கள் விசாரித்தனர். இதனால் அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.
இந்தநிலையில் இன்று காலை செந்தில் தரமனி ரெயில் நிலையம் அருகே பெட்ரோல் கேனுடன் வந்தார். திடீரென அவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தரமணி போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.