
மும்பை,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவியது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. இத்தகைய பரபரப்பான சூழலில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கமே தடுமாறியது. டெல்லி அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் 11 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். கேப்டன் டூ பிளசிஸ் 6 அன்களில் வெளியேறினார்.
65 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணிக்கு சமீர் ரிஸ்வி ஓரளவு நம்பிக்கை கொடுத்தார். எனினும், அவர் நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை. சாண்ட்னர் பந்தில் 39 ரன்களில் போல்டு ஆனார். அதன் பிறகு டெல்லி அணியின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து போனது. பின் வரிசை வீரர்கள் சொல்லி வைத்தாற்போல் வரிசையாக நடையை கட்டினார்.18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டெல்லி அணி 121 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிளே ஆப் கனவு நொறுங்கியுள்ளது.