மதமோதல்களை தூண்டும் வகையில் செயல்படுவதாக போலீசில் புகார்: மதுரை ஆதீனத்துக்கு சிக்கல்

1 week ago 4

மதுரை: மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவுசெய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர். சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 2ம் தேதி காலை மதுரையிலிருந்து சென்னைக்கு மதுரை ஆதீனம் காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேலம் ரவுண்டானா பகுதியில் வந்தபோது, மற்றொரு காருடன் மதுரை ஆதீனத்தின் கார் மோதியது. இதில் மதுரை ஆதீனத்தின் கார் லேசான சேதம் அடைந்தது.

ஆதீனத்திற்கு காயம் ஏதுமில்லை. பின்னர் மதுரை ஆதீனம் சென்னை புறப்பட்டு சென்றதால் காவல் நிலையத்தில் புகார் ஏதும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்த விபத்து தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “என்னை திட்டமிட்டு கொலை செய்ய சதி நடந்தது” என்று தெரிவித்திருந்தார். சிசிடிவியை ஆய்வு செய்தபோது ஆதீனம் பொய் கூறியதும், அவரின் கார் அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இதனிடையே மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் செல்வம் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனம் மீது வழக்கு பதியக் கோரி மதுரையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் புகாரில்; உளுந்தூர்பேட்டை அருகே ஏற்பட்டவாகன விபத்து குறித்து தவறான தகவல்களை பரப்பி மத மோதலை தூண்டும் வகையில் செயல்படுகிறார்.

தவறான தகவல்களை பரப்பி மதமோதல்களை தூண்டும் வகையில் மதுரை ஆதீனம் பேசுகிறார். மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவுசெய்ய வேண்டும். ஆதீனம் பேசியதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

The post மதமோதல்களை தூண்டும் வகையில் செயல்படுவதாக போலீசில் புகார்: மதுரை ஆதீனத்துக்கு சிக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article